Published : 23 Mar 2020 08:14 AM
Last Updated : 23 Mar 2020 08:14 AM
கரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈரோடு வந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தலைமை காஜிக்கு கூட முன்கூட்டியே தெரியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்தவர்களில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் வெளிமாநிலம், வெளிநாட்டினர் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஈரோடு மசூதிகளில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து உளவுத்துறை மூலமாக காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி முகம்மது கிபாயத்துல்லா கூறியதாவது:
உலக அளவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் சமய அறிவு பற்றித் தெரிந்து கொள்ள வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும் குழுவினருக்கு தப்ளிக் என்று பெயர். இந்த குழுவினர் இந்தியா வரும்போது டெல்லியில் உள்ள மர்கஸ் என்ற தலைமையகத்திற்கு வருவார்கள். அவர்கள் எந்த மாநிலத்திற்கு, எந்த பகுதிக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தி அனுப்பி வைப்பர். தமிழகத்தில் தப்ளிக் குழுவினருக்கு சென்னையில் ஒரு மையம் உள்ளது. சென்னை மையம் வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேரும் ஈரோடு வந்துள்ளனர்.
இவ்வாறு தப்ளிக் குழுவினர் ஒரு மாவட்டத்திற்கு வரும்போது, அரசு காஜி மற்றும் எந்த மசூதிக்கு செல்கிறார்களோ அந்த மசூதியின் இமாம் மற்றும் முத்தவல்லிக்கு, தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் அதுபோல எந்த தகவலும் அளிக்கவில்லை.
தப்ளிக் குழுவினர் இங்குள்ள இஸ்லாமியர் களோடு இணைந்து புத்தகங்களைப் படித்து, வழிபாடு செய்வதற்காகவே வந்துள்ளனர். தப்ளிக் குழுவினர் முதலில் ஈரோடு சுல்தான்பேட்டை மசூதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அடுத்த நாள் கொல்லம்பாளையம் மசூதிக்கு வந்துள்ளனர். அந்த நிலையில்தான், கரோனா தொற்று குறித்த தகவலால் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பழகிய 120 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், என்றார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்தனரா அல்லது ரயில் மூலம் வந்தனரா என்பது குறித்த எந்த விவரமும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் மூலம் எவ்வளவு பேருக்கு கரோனா தொற்று பரவியிருக்குமோ என்று மக்கள அச்சமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT