Published : 23 Mar 2020 06:51 AM
Last Updated : 23 Mar 2020 06:51 AM
சென்னையில் அனைத்து ஓட்டல்களும் நேற்று அடைக்கப்பட்டிருந்த நிலையில், அம்மா உணவகங்கள் பேருதவியாக இருந்ததாக தொழிலாளர்கள், சாலையோரம்வசிக்கும் வீடற்றோர் தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று அனைத்துஅம்மா உணவகங்களும் திறக்கப் பட்டிருந்தன. அதில் காலையில் ஒரு இட்லி தலா ரூ.1 விலையிலும், பொங்கல் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய வகைகள் தலா ரூ.5, தயிர் சாதம் ரூ.3 என விற்பனை செய்யப்பட்டன. இது தொழிலாளர்கள் பலருக்கும், சாலையோரம் வசிக்கும் வீடற்றோருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் இயங்கும் அம்மா உணவகத்தில் உணவருந்த வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கூறும்போது, "நாங்கள் அருகில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறோம். அங்கு சமைக்கும் வசதி இல்லை. அருகில் உள்ள பட்டறையில் வேலை செய்கிறோம். வேலை நாட்களில் அந்த பட்டறையிலேயே உணவு கிடைக்கும். தற்போது உணவகங்கள் மற்றும் பட்டறை ஆகியவை மூடப்பட்டதால், உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தோம். இந்நிலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருவது எங்களுக்கு பேருதவியாக இருந்தது" என்றனர்.
பணி நிமித்தமாக வெளியூரில்இருந்து வரும் தொழிலாளர்கள் தான் அம்மா உணவகத்துக்கு முக்கிய வாடிக்கையாளர்கள். நேற்று முழு அடைப்பு நடைபெற்றதால், பொதுமக்கள் யாரும் வெளியில் வரவில்லை. இதனால் நேற்று அம்மா உணவகங்கள் திறந்திருந்தபோதும், வழக்கமான அளவை விட குறைவாகவே உணவு விற்பனையானது. சில இடங்களில் உணவு விற்பனையாகாமல் தேங்கியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அசாதாரண சூழலில் ஓட்டல்கள் அனைத்தும் மூடப் பட்ட நிலையில், உணவு மீதமாவதில் எந்த வருத்தமும் இல்லை. அம்மா உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர் யாரையும் உணவுஇல்லை என்று திருப்பி அனுப் பாமல், உணவு வழங்கி இருக் கிறோம். இதை மாநகராட்சி பெருமையாக கருதுகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT