Published : 11 Aug 2015 08:40 AM
Last Updated : 11 Aug 2015 08:40 AM

மனிதாபிமானமிக்கவர்களால் பி.டெக் சேர இடம் கிடைத்தது: மருத்துவம் படிக்கவே ஆசைப்பட்டேன் - ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் முசிறி சுவாதி

மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட தனது கனவு நனவாகுமா என்ற குழப்பத்தில் உள்ளார் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த மாணவி சுவாதி.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் தங்கப்பொன்னு மகள் சுவாதி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் பிளஸ் 2 தேர்வில் 1,117 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான கலந் தாய்வுக்கு விண்ணப்பித்தார். ஆனால், கட்-ஆஃப் மதிப்பெண்கள் (189) போதுமானதாக இல்லாத தால் இவருக்கு அழைப்பு வரவில்லை.

இந்நிலையில், பி.டெக் (பயோ டெக்னாலஜி) படிப்புக்கு கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், தவறுதலாக தனது தாயுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவிட்டார். விவரத்தை கேட்ட அங்கிருந்த மனிதநேயம் மிக்க சிலர் தாங்களே செலவு செய்து விமானத்தில் கோவைக்கு அனுப்பி வைத்தனர். கலந்தாய்வில் பங்கேற்று தனியார் கல்லூரி ஒன்றில் பி.டெக் (பயோடெக்னாலஜி) இடத்தை பெற்றுள் ளார் சுவாதி.

ஆனாலும், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது இளவயது கனவு நனவாகவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளார் அவர்.

சுவாதியின் தாய் தங்கபொன்னு ‘தி இந்து’விடம் கூறியதாவது: எனக்கு திருமணமாகி மூத்த மகள் சுவாதிக்கு ஒன்றரை வயது, இளைய மகள் ரக்ஷிதா வயிற்றில் 6 மாத கருவாக இருந்த நிலையில் என் கணவர் சில காரணங்களுக்காக எங்களை என் தந்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அதிலிருந்து தந்தை பொன்னுசாமி வீட்டில் மாடுகளை பராமரித்து, பால் கறந்து இரு பெண்களையும் படிக்க வைத்து வருகிறேன்.

சிறு வயது முதலே இருவருமே நன்றாக படிப்பார்கள். சுவாதிக்கு டாக்டராக வேண்டும் என்றுதான் விருப்பம். ஆனால், தேர்வு நேரத்தில் உடல் நிலை சரியில்லாததால் படிக்க முடியாமல் மதிப்பெண்கள் குறைந்துவிட்டது. கலந்தாய்வுக்கு கோவைக்கு பதி லாக சென்னைக்கு சென்றபோது பரிதவித்துப் போனோம். நல்ல உள்ளங்களின் உதவியால் விமானத்தில் கோவைக்குச் சென்று பி.டெக் இடம் கிடைத்துள்ளது. உதவியவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள் கிறேன். ஆனாலும், சுவாதி மருத்துவம் அல்லது கால்நடை மருத்துவம் படிக்கவே ஆசைப்படு கிறாள். இதனால் பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறாள். தமிழக அரசு இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் கண்ணீரோடு. இதுகுறித்து சுவாதியிடம் கேட்ட போது, “மருத்துவம் அல்லது கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை” என்றார்.

ஏழ்மையை கருத்தில் கொள்ளாமல் படிக்க வேண்டும் என்ற முனைப்புடன் படித்து 1,117 மதிப்பெண்கள் பெற்றும், தான் நினைத்த உயர்கல்வியை படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சுவாதியின் கண்களில் இழையோடுவதை காண முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x