

கரோனா வைரஸை பரவாமல் தடுக்கும் தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக 75 மாவட்டங்களை 31-ம் தேதிவரை முடக்க உத்தரவிட்டதில், தமிழகத்தின் காஞ்சிபுரம், ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களும் முடக்கப்பட உள்ளன.
ஆனால், இதுகுறித்து மத்தியஅரசுடன் பேச்சு நடத்தி வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவி்க்கப்பட்டு வந்தாலும், இந்த மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவது நள்ளிரவுக்குள் அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது.
சீனாவின் வுஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் வியாபித்து, அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் 3லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 165 நாடுகள் இதுவரை கரோனாவின் கிடுக்கிப்பிடியில் சிக்கியுள்ளன.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் மெல்ல ஊடுருவி வருகிறது. கரோனா வைரஸை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும்,மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸின் தொற்று சங்கிலியை உடைக்கும் வகையில் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பெயரில் நாடுமுழுவதும் மக்கள் ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்பட்டது. நாடுமுழுவதும் மக்கள் நன்கு ஒத்துழைப்பு அளித்து வீட்டை விட்டு வெளியேவராமல் ஊரடங்கில் பங்கேற்றனர்.
இதையடுத்து நாடுமுழுவதும் 75 மாவட்டங்களில் மக்கள் அடர்த்தி, போக்குவரத்து அதிகம் இருப்பவை ஆகியவற்றை அடையாளம் கண்டு அந்த மாவட்டங்களில் லாக்டவுன் கொண்டுவர மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக மத்திய அரசின் அதிகாரிகள் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளருடன் கலந்தாய்வு செய்து 75மாவட்டங்களின் பெயர்களை அறிவித்துள்ளனர்.
இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் லாக்டவுன் நடைமுறைக்கு வந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றிலும் முடக்கப்படும், வெளியே செல்லமுடியாது. அவ்வாறு சென்றாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவே வெளியே செல்ல முடியும். பொதுப்போக்குவரத்து முடக்கப்படும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் கடைகளைத் தவிர மற்ற கடைகள்மூடப்படும்.
டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பாலான விதிமுறைகள் தான் இந்த 3 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதில் மாநில அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப சில விதிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சேர்க்கப்படலாம்.
அந்த விதிமுறைகள் என்னென்ன?
அதுமட்டுமல்லாமல் சில சேவையில் இருப்போருக்கு விலக்கு அளிக்கப்படலாம், அதாவது சட்டம் ஒழுங்கு பணி, நீதிமன்ற பணியில் இருப்போர்,போலீஸார், சுகாதாரத்துறையினர், தீதடுப்புதுறை, சிறைத்துறை, நியாய விலைக்கடை
மின்வாரியப் பணி, குடிநீர் வாரியம், நகராட்சி பணியாளர்கள், கரூவூலப் பணி, ஊடகப்பிரிவினர், தொலைத்தொடர்பு இன்டர்நெட்,தபால்சேவை, இ-வர்த்தகப்பிரிவு குறிப்பாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவுகள் வழங்குவோர்
மளிகைக் கடைகள், பால் விற்பனை நிலையம்.பெட்ரோல் பம்ப், எல்பிஜி நிலையம் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படலாம். இவை மாநில அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் முடிவுக்கு ஏற்ப மாறுபடும்.