Published : 22 Mar 2020 05:38 PM
Last Updated : 22 Mar 2020 05:38 PM
கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் முயற்சியாக இன்று (மார். 22) காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மக்கள் ஊரடங்கு கோரிக்கையை மதுரைவாசிகள் முழுமையாகக் கடைபிடித்ததால் நகர், புறநகர்ப் பகுதி இன்று வெறிச்சொடி இருந்தன. வாகன போக்குவரத்துகள் இன்றி, மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தனர்.
பிரதமரின் மக்கள் ஊரடங்கு கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பேருந்து, ரயில், கார், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது என, அறிவிக்கப்பட்டது. வர்த்தக சங்கங்களும் ஒருநாள் மட்டும் தங்களது கடைகளை மூடி, காரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களைக் காக்க, ஒத்துழைப்பு அளித்தனர். இந்த ஊரடங்கு உத்தரவால் தூங்கா நகரமான மதுரை இன்று தூங்கியது போன்று காட்சி அளித்தது.
பால், மருத்துவமனை, உள்ளிட்ட மிக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர. எஞ்சிய அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன.
எந்நேரமும் மக்கள் கூட்டம் அதிகமாக விழாக்கோலம் போன்று காட்சி தரும் நான்கு மாசிவீதிகள், வெளிவீதிகள், நகைக் கடை பஜார், மீனாட்சி, பாண்டி பஜார்கள், முக்கிய வீதிகள் என, மதுரை நகரமே ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.
எப்போதும், பரபரப்பாகவே இயங்கும் பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி மற்றும் ரயில் நிலையங்கள் பயணிகள் இன்றி காற்றாடின. ரயில் நிலையத்திலுள்ள 12 பிளாட்பாரங்களிலும் ஒன்றில்கூட ரயில் நிறுத்தப்படவில்லை.
மாட்டுத்தாவணி பூ மாக்கெட், சென்டரல், பரவை காய்கறி மார்க் கெட் பகுதியில் மக்களை காணமுடியவில்லை. அத்தியாவசிய தேவைக் கான வாகனங்கள் மட்டும் ஆங்காங்கே ஓடின. வாகன போக்குவரத்து இன்றி, அனைத்து ரோடுகளும் பளிச்சென்று இருந்தன.
ரோட்டோர கடைக்காரர்களும் தங்களது கடைகளை பூட்டி னர். திருமண மண்டபங்கள், சத்திரங்களைத் திறக்க அனுமதியின்றி, முகூர்த்த நாளான இன்று திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோர் வேறு வழியின்றி குறைந்தளவில் உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற திருமணங்கள் நடந்தன.
இது போன்று பல்வேறு வகையில் மக்களின் ஒத்துழைப்பால் மதுரை நகரம் இதுவரையிலும் காணாதபடி, மககள், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறவில்லை வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தனர். காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பேருந்து, ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட போலீஸார் கண்காணிப்பில் இருந்தனர்.
தெருப்பகுதியில் கூடியிருந்தவர்களிடம் மக்கள் ஊரடங்கு பற்றி எடுத்துக் கூறி, கலைந்து போகச் செய்தனர். புறநகர் பகுதியில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் போன்ற பகுதி யிலும் இதே நிலை நீடித்தது.
இரவு 7 மணிக்கு மேலாக மக்கள் வெளியில் போகத்தொடங்கினர். வாகன போக்குவரத்தும் இருந்தது. ஒருசில கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT