Published : 22 Mar 2020 04:28 PM
Last Updated : 22 Mar 2020 04:28 PM
மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு அளித்து தூத்துக்குடியில் கூட்டம் சேர்க்காமல் எளிமையாக திருமணம் நடந்துள்ளது. கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணமக்கள் சங்கர்- சிவசங்கரி, கரோனா விழிப்புணர்வுக்காக முகக்கவசத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன.
பேருந்து, ரயில், ஆட்டோ, கார், வேன், லாரி, விமான சேவை என அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து நகரங்களும் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
ஆனால், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பலர் திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். திருமண மண்டபங்களை முன்பதிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாராக வைத்திருந்தனர். இந்நிலையில் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சிலர் தங்கள் திருமணங்களை ஒத்திவைத்தனர்.
ஆனால், சிலர் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக திருமணங்களை நடத்தினர். ஆனால், அரசு அறிவுறுத்தலைத் தொடர்ந்து அதிகக் கூட்டம் இல்லாமல், மிக முக்கியமான உறவினர்கள் மட்டுமே அழைத்து இந்த திருமண விழாக்களை நடத்தினர்.
அனைத்து கோயில்கள், தேவாலயங்கள் மூடப்பட்டதால் பெரும்பாலான மணமக்கள் திருமண மண்டபங்களிலேயே எளிமையாக திருமணங்களை முடித்துக் கொண்டனர். சிலர் சிறிய கோயில்களில் வைத்து எளிமையாக திருமணம் செய்தனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர்- சிவசங்கரி திருமணம் தூத்துக்குடி சிவன் கோயிலில் வைத்து இன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. மக்கள் ஊரடங்கு காரணமாக சிவன் கோயில் மூடப்பட்டுள்ளது.
இதனால் சங்கர்- சிவசங்கரியின் திருமணம் தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து மிக எளிமையான முறையில் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருமணத்தின் போது கரோனா வைரஸ் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக மணமக்கள் இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். மேலும், கலந்து கொண்ட உறவினர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
இதுகுறித்து மணமக்களின் உறவினர்கள் கூறும்போது, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதையொட்டி இன்று நடைபெறவிருந்த சில திருமணங்கள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம்.
ஆனால், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யமுடியாத காரணத்தால் சங்கர்- சிவசங்கரியின் திருமணத்தை, அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி முக்கிய உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையான முறையில் நடத்தினோம்.
திருமணத்துக்கு வந்திருக்கும் உறவினர்களிடையே கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மணமக்களும் முகக்கவசம் அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு காரணமாக சில சிரமங்கள் ஏற்பட்டாலும், பொதுநலன் கருதி நடைபெறும் இந்த ஊரடங்குக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். அதன் அடிப்படையிலேயே திருமணத்தை எளிமையாக நடத்தி உள்ளோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT