Published : 22 Mar 2020 10:45 AM
Last Updated : 22 Mar 2020 10:45 AM
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சிதம்பரத்தைச் சேர்ந்த தையல் கலைஞர், முகக்கவசங்களை தைத்து, இலவசமாக அப்பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறார்.
சிதம்பரம் மண்வெட்டி பக்கிரி சந்து தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை ( 60). இவர் கடந்த 40 ஆண்டுகளாக தையல் தொழில் செய்து வருகிறார். பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகள், மருத்துவத் துறையினருக்கான மேலாடைகளைத் தயாரித்து தருவதில் வல்லவர்.
தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், முகக்கவசத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த அண்ணாமலை, தரமான கதர் துணிகள் மூலம் முக்கவசங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த 4 நாட்களாக தானும், தன்னுடன் பணியாற்றும் 5 தையற் கலைஞர்களைக் கொண்டு 500க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை உருவாக்கி, அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்கி வருகிறார். எந்த விளம்பரமும் இன்றி அண்ணாமலை செய்து வரும் நற்செயல் வாட்ஸ் அப்பில் பரவ, சிதம்பரம் நகராட்சியில் இருந்து நேற்று, அவரை அணுகி பாராட்டு தெரிவித்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா மற்றும் செங்கல்பட்டு தெற்கு மண்டல பொறியாளர்முருகேசன், சிதம்பரம் நகராட்சி பொறியாளர் மகாதேவன் ஆகியோர் இவரது கடைக்கு சென்று நேரில் பாராட்டு தெரிவித்து அவரது செயலை ஊக்கப்படுத்தி, நகராட்சி சார்பில் சான்றிதழை வழங்கினர்.
இதுகுறித்து அண்ணாமலையிடம் கேட்டதற்கு, "உலகம் முழுவதும் அச்சத்தில் இருக்கும் போது, என்னால் இயன்றதை செய்கிறேன். '' என்கிறார் எளிமையாக. ஒரு முகக்கவசம் செய்ய எவ்வளவு செலவாகிறது என்று கேட்டதற்கு, அதைக் கூட கூற மறுக்கிறார். கதர் துணியில் இது போல முகக்கவசம் செய்ய, தோராயமாக ரூ. 7 வரையில் (பணியாளர் ஊதியம் சேர்த்து) ஆகும் என்று பிற தையல் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT