Published : 22 Mar 2020 09:36 AM
Last Updated : 22 Mar 2020 09:36 AM
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பேருந்துகள், ரயில், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட அனைத்து வாகன சேவைகளும் நிறுத்தப்படுகின்றன. கடைகள், சந்தைகள், ஓட்டல்களும் மூடப்படுகின்றன. மாலை வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘‘இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மக்களால் மக்களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போல கருதிக் கொள்ளுங்கள். 22-ம் தேதி ஞாயிறு (இன்று) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டைவிட்டு வெளியில் செல்லாதீர்கள். கரோனா வைரஸில் இருந்து நாட்டைக் காப்பதற்கான முயற்சியின் சோதனையாக இது அமையும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், மாலை 5 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து கைதட்டியும், மணியோசை எழுப்பியும், கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் இந்த அழைப்புக்கு தமிழக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் என தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்களும் ஓடாது. மாநில எல்லைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏற்கெனவே மூடப்பட்ட நிலையில், மதுக்கடைகளும் இன்று மூடப்படுகின்றன. தனியார் பேருந்து, ஆம்னி பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது என்று ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கங்கள் அறிவித்துள்ளன. வாடகை கார்கள், செயலிகள் மூலமாக அழைக்கப்படும் கார் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களையும் மூடுவதாக தமிழ்நாடு ஓட்டல் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வதில்லை; மீன் விற்பனையில் ஈடுபடுவதில்லை என்று அறிவித்துள்ளனர். இறைச்சிக் கடைக்காரர்கள், மொத்த விற்பனையாளர்களும் விற்பனையில் ஈடுபடுவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
பால் முகவர் சங்கமும் நேற்று மாலையே கூடுதலாக பால் கொள்முதல் செய்து வீடுகளுக்கு விநியோகித்தன. இன்று காலை 6.30 மணிக்குள்ளாகவே பால் விநியோகத்தை முடித்துவிடுவதாகவும் அறிவித்துள்ளன.
கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளும் இன்று முழு கடையடைப்பில் பங்கேற்கின்றன. பிரதமரின் அழைப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவையும் ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பில் ஈடுபடுகின்றன.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் சாலையோரம் வசிக்கும் வீடற்றவர்களை காப்பகங்களில் தங்கவைத்து, உணவு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல நேற்று மாலை 3 மணி முதலே மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அங்கு வரும் ஒருசிலரை போலீஸார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
பிரதமரின் அழைப்புக்கு பொதுமக்களும், வணிக நிறுவனங்களும், தொழில் துறையினரும், மத்திய, மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதால், உலக அளவில் கரோனா ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
காய்கறி சந்தை, இறைச்சிக் கூடங்கள், மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர், ஆட்டோ, வாடகை கார்கள் இயக்குவோர், தனியார் பேருந்து சேவை வழங்குவோர் உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் எந்த நிர்பந்தமும் கொடுக்கப்படாத நிலையில், அவர்கள் தன்னார்வ அடிப்படையில் சுயமாகவே, பிரதமரின் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் ஊரடங்கு நிகழ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT