Published : 21 Mar 2020 10:57 PM
Last Updated : 21 Mar 2020 10:57 PM

மக்கள் ஊரடங்கு இருந்தாலும் பால் தங்குதடையின்றி கிடைக்கும்: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

நாளை(22/3) ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு இருந்தாலும் பால் விநியோகம் தடையின்றி இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 15 நாட்கள் விடுமுறை விடப்ப்ட்டும், வீட்டிலிருந்து பணி செய்யவும் உத்தரவிட்டும் பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் முறையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் பேசுகையில் மக்கள் ஊரடங்கை மார்ச் 22 ஞாயிறு காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இதையடுத்து நாளை நாடெங்கும் எந்தப்பணியும் இன்றி அனைத்தும் முடங்குகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள்கூட அடைக்கப்படுகிறது.

தனியார் பால் முகவர்கள் பால் விநியோகம் இல்லை என்று அறிவித்து விட்டனர். ஆனால் ஆவின் நிர்வாகம் பால் விநியோகம் தடையின்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் செய்திக்குறிப்பு:

“நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை அறிவிப்பினையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொது ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை 22.03.2020 அன்று கடைபிடிப்பதையொட்டி, அன்றைய தினம் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைத்திட ஏதுவாக பால் விநியோக பணிகளை முடுக்கிவிட ஆவின் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும் அனைத்து ஆவின் நேரடி விற்பனை நிலையங்களிலும், பொதுமக்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைத்திடும் வண்ணம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொது மக்களின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, கூடுதல் பால் வழங்க ஆவின் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

பொது மக்களின் சேவையில் ஆவின் நிறுவனம் என்றும் அதிக அக்கறையுடன் செயல்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்”.

இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x