Published : 21 Mar 2020 10:17 PM
Last Updated : 21 Mar 2020 10:17 PM

2004-ம் ஆண்டு சுனாமி நிகழ்வுக்குப்பின் வெறிச்சோடிய மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகள் கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மதியம் 3 மணிக்கு பொதுமக்களுக்கு அனுமதி இன்றி மூடப்பட்டது. 2004-ம் ஆண்டு சுனாமியின்போது ஒரு வாரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் வெறிச்சோடியது. 16 ஆண்டுகளுக்குப்பின் தற்போது வெறிச்சோடி போயுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரலாறு காணாத நிகழ்வுகளை இந்தியாவே சந்திக்கிறது. 1972-ம் ஆண்டு யுத்தத்துக்குப் பின் வீடுகளில் தனிமைப்படுவது தேசம் முழுதும் ஊரடங்கு என்கிற நிலை நாளை ஒருநாள் நடக்க உள்ளது.

மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் சமுதாய தனிமை என்கிற நிலைக்கு வீடுகளில் தங்களை 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளும் நிகழ்வும் இந்தக்காலக் கட்டத்தில் நடக்கிறது. இது எந்த தலைமுறையில் யாரும் பார்க்காத ஒன்று. 1914-20 நடந்தது. இரண்டாம் உலகப்போர் 1939-45 வரை நடந்தது. இரண்டும் இக்கட்டான காலக்கட்டங்கள் அதைச் சந்தித்த தலைமுறையில் வசிப்போர் தற்போது மிகக்குறைவானவர்களே இருப்பார்கள்.

அது 1914 செப்டம்பர் 22 அன்று அந்த தாக்குதல் நடந்தது. அன்று நவராத்திரி, அந்தக் கொண்டாட்டத்தில் சென்னை மூழ்கி இருந்தது, அப்பொழுது திடீரென சென்னை துறைமுகத்தில் நுழைந்து கோட்டையினை தாக்கியது எம்டன். சென்னை உயர்நீதிமன்றம் வரை குண்டுகள் தாக்கின.

துறைமுக பணியாளார் 10 பேர் உயிரிழந்தனர். பதிலுக்கு பிரிட்டிஷ் படைகள் தாக்க தொடங்கும் முகமாக, விளக்குகள் அணைக்கபட்டு, சென்னை இருட்டில் மூழ்கியது. இன்னும் சில குண்டுகளை வீசிவிட்டு மறைந்தது எம்டன். முதல் தாக்குதலை எதிர்கொண்ட சென்னை மக்கள் பயத்தால் சுமார் 25 ஆயிரம் ஊரை காலிசெய்து சொந்த ஊர் திரும்பினர் என்பார்கள். அதிலிருந்து எம்டன் குண்டும் அது ஏற்படுத்திய பயமும் பல பத்தாண்டுகள் மக்களால் பேசப்பட்டது.

அதன் பின்னர் 1971ல் இந்தியா பாகிஸ்தான் போர் நேரத்தில் அமெரிக்காவின் 7 வது கடற்படை வங்காள விரிகுடாவுக்குள் வருவதாக சொன்னபோது சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் மக்கள் பயத்தால் அச்சமடைந்தனர். ஒரு நாள் இரவு ஊரெங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிகழ்வு நடந்தது. சோவியத் ரஷ்யா எச்சரிக்கையை அடுத்து 7 வது கடற்படை விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறுவார்கள்.

அதன்பின்னர் 1979-ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்கைலாப் (SKYLAB) என்றொரு விண்வெளிக்கலம் கட்டுப்பாட்டை இழந்தது. ஸ்கைலாப் என்ற ஆயுள் தீர்ந்துபோன ராக்கெட் பூமியின் மீது, குறிப்பாக தென்னிந்திய விழப் போவதாகவும், 250 கிலோ மீட்டர் வேகத்தில் சிதறும் ராக்கெட் துகள்கள் பூமியைத்தாக்கும் அதனால் மனிதர்களுக்கு பாதிப்பு என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.

இதனால் அனைவரும் தினமும் அச்சத்துடன் கண்விழித்த காலக்கட்டம் தமிழகத்தில் இருந்தது. அன்றைக்கு இண்டெர்நெட் போன்ற வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இருந்த சில அச்சு ஊடகங்களும் அறிவியல் ரீதியாக ஆராயாமல் எழுதிய பேய்க்கதைகளால் மிகுந்த அச்சத்துக்கு அனைவரும் ஆளானார்கள்.

கடைசியில் அது ஸ்கைலாப் 1979-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி அது பசிபிக் கடலில் விழுந்தது. இன்றைய காலக்கட்டத்தில் அப்படி ஏகப்பட்ட விண்வெளிக்கலங்கள் கடலில் விழவைக்கப்பட்டு மீட்கப்படுவது சாதரண நிகழ்வாக உள்ளது.

இதேப்போன்று 1980-களில் வந்த ஒரு சூர்ய கிரகணத்தின்போது வெளியிலேயே வரக்கூடாது என மிக அதிகமாக பிரச்சாரம் செய்யப்பட்டு பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக அன்றைக்கு விடுமுறை விடப்பட்டு, அன்றைக்கு இருந்த ஒரே தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் பகலில் இரண்டு திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே திரைப்படம் என்று இருந்த காலக்கட்டத்தில் இரண்டு திரைப்படம் என்பதால் பொதுமக்கள் வெளியேவே வரவில்லை.

இதுபோன்ற நிகழ்வுக்கு பின்னர் சென்னை உள்ளிட்ட தமிழக கடற்கரை சந்தித்த மிகப்பெரிய பேரழிவு சுனாமி. 2004-ம் ஆண்டு டிச. 26 அன்று சுனாமி தாக்கியது. தமிழகம் இதுவரை கேள்விப்படாத ஒன்று அது நடைமுறையில் வந்து ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அன்று சென்னை கடற்கரையில் மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்கிற அச்சத்திலும், கடல் மணல் பரப்பில் அகற்றப்பட வேண்டிய நிலையால் வாரக்கணக்கில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் வெறிச்சோடி இருந்தது.

.

அந்த ஆண்டு நான்கு நாட்கள் கழித்து வந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றி வெறிச்சோடிய சாலைகள் சென்னை முழுதும் காணப்பட்டது. 2005-ம் ஆண்டு ஜனவரி 1 புத்தாண்டு அஞ்சலி செலுத்தும் ஆண்டாக பிறந்தது.

இதற்கு 16 வருடங்கள் கழித்து தற்போது சென்னை கடற்கரை கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளதால் சுனாமிக்குப்பின் வெறிச்சோடி காணப்படுகிறது. சுனாமி நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தற்போது சென்னை கடற்கரை வெறிச்சோடிய நிலையில் உள்ளதை வைத்து அன்றைய சுனாமி நிலையில் இருந்ததைப் புரிந்துக்கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x