Published : 21 Mar 2020 06:33 PM
Last Updated : 21 Mar 2020 06:33 PM
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 65 மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிகிறது.
சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் நேற்று இரவு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள கரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அறையில் சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இம்மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 12 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
எங்களுக்கு உதவ நீங்கள் வீட்டில் இருங்கள்..
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்கி நாளை (மார்ச்22) காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டிலிருந்து வெளியே வராமல் மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அரசும் பல்வேறு அமைப்புகளை சேர்நத்வர்களும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு பணி செய்ய நாங்கள் வெளியில் இருக்கிறோம். எங்களுக்கு உதவ நீங்கள் வீட்டில் இருந்து கொள்ளுங்கள். இந்திய அரசு அறிவிப்பின்படி நாளை (22-ம் தேதி) பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம்.
இந்த ஊரடங்கு உத்தரவு என்பது மக்களாகிய நாம், நமக்கு நாமே கட்டுப்படுத்திக்கொள்வது, கொடிய கரோனா வைரஸை விரட்டுவதற்காக மட்டுமே.
அரசின் இந்த உத்தரவை மதித்து கரோனா வைரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோயில்களில் தொடரும் அன்னதானம்..
இந்து ஆலய பாதுகாப்பு இயக்க நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் கிளை கமிட்டி சார்பில் நெல்லையப்பர் கோயிலில் இன்று நடைபெறுவதாக இருந்த உழவாரப்பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்பணி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அக்கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முக்கிய திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. அது தடைபடவில்லை என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல் பாளையங்கோட்டை ராமசாமி கோயிலிலும் தடைபடாமல் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. மக்கள் ஊரடங்கு அனுசரிக்கப்படும் இன்று அன்னதானம் வழங்கப்படுமாக என்பதை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி முடிவு செய்வோம் என்றும் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
கடைகளில் கூட்டம்..
மக்கள் ஊரடங்கு நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி கடைகள் அனைத்தும் மூடப்படும் என்பதால் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்க சந்தைகளில் இன்று கூட்டம் அதிகமிருந்தது. பாளையங்கோட்டை சந்தையில் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் காணப்பட்டது.
மூடப்பட்ட கால்நடை சந்தை..
ஆலங்குளம் ஒன்றியத்தில் வெங்கடேஸ்வரபுரம் ரெட்டியார்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை சந்தை கூடும். இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆடு, கோழி, மீன் மற்றும் கருவாடு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
இவற்றை வாங்க ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இன்று கூடவிருந்த இந்த சந்தை மூடப்பட்டது.
ஊருக்குப் புறப்பட்ட வடமாநில இளைஞர்கள்..
திருநெல்வேலியில் தங்கியிருந்து பணிபுரியும் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரும் ரயில்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கிறார்கள். அவர்களில் பலரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். கட்டிடப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபட்டுவந்தனர். வரும் 31-ம் தேதி வரை பணிகள் ஏதும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT