Published : 21 Mar 2020 02:49 PM
Last Updated : 21 Mar 2020 02:49 PM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக பள்ளிக்கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், சுற்றுலாதளங்கள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
கரோனா பரவலை தடுக்க மார்ச் 31 -ம் தேதி வரை அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் வருவதை தவிர்க்க பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு 9-ம் வகுப்புவரை நடக்கும் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று ஒத்திவைத்து ஏற்கெனவே முதல்வர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 10 வது 11 மற்றும் 12 வது வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்தி வைக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. தற்போது 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகல் நடந்து வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கவேண்டும், 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றதாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மார்ச் 27- ஏப் 13 வரை நடைபெறுவதாக இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது, தேர்வு தமிழ் புத்தாண்டுக்கு பிறகு தொடங்கும். அதற்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும், 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. இந்த இரண்டுத்தேர்வுகளும் திட்டமிட்டப்படி நடக்கும் என்று தெரிவித்தார்.
ஆனால் 9-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பது குறித்து பதிலளிக்கவில்லை. பிளஸ்டூ பொதுத்தேர்வை ஒத்தி வைத்தால் அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்வது பாதிக்கப்படும் என்பதால் அதை ஒத்திவைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT