Published : 21 Mar 2020 12:07 PM
Last Updated : 21 Mar 2020 12:07 PM
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி 110 விதியின்கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு முறை 2016-17 ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியினால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து அந்த ஆண்டு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசும், பொதுமக்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 2017-ம் ஆண்டு ஜன.31-ம் தேதி அன்று, நீட் தேர்வினை எதிர்த்து ஒரு சட்டமுன்வடிவினை இதே சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதே வேளையில், இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களை, குறிப்பாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டு, மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடப்பட்டும் வருகிறது.
நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
தமிழக அரசு, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றது. இது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர் மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழக அரசுக்கு வழங்க, ஓய்வு பெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்தில், பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, சட்டம் ஆகிய துறைகளின் அரசுச் செயலாளர்களும், பள்ளிக் கல்வித் துறையினால் நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வாணையத்தின் உறுப்பினர்-செயலராகச் செயல்படுவார்.
மேற்கூறிய பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவர்களின் சமூக பொருளாதார நிலையினை மதிப்பீடு செய்து, இந்நிலையைச் சரி செய்ய, தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்யும். தனது பரிந்துரையை ஒரு மாத காலத்திற்குள் இவ்வாணையம் அரசுக்குச் சமர்ப்பிக்கும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT