Published : 21 Mar 2020 07:42 AM
Last Updated : 21 Mar 2020 07:42 AM
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் பொருட்களை வாங்க நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வரும் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) மக்களால் மக்களுக்காக ஊரடங்கு பிறப்பித்துள்ளதுபோல கருதிக் கொள்ளுமாறும், காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடைகள் அடைப்பு
இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நாளை அடைக்கப்படுகின்றன.
மேலும், கரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகமானால், கடைகள் மார்ச் 31-ம் தேதி வரைஅடைக்கப்படலாம் என்ற அச்சமும் மக்கள் மனதில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடந்த சில நாட்களாக வாங்கி வீடுகளில் இருப்பு வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை கோயம்பேடு சந்தை மூடப்படும் என்று வதந்தி பரவியதால் ஏற்கெனவே பொதுமக்கள் அதிக அளவில்காய்கறிகளை வாங்கத் தொடங்கினர். அது வதந்தி என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், நிலைமை சீரானது. இந்த சூழலில், பிரதமரின் இந்த அறிவிப்பால் நேற்று மீண்டும் மளிகை பொருட்கள், காய்கறிகளை மக்கள் வாங்கக் தொடங்கியுள்ளனர்.
வியாசர்பாடி, பெரம்பூர், ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் இயங்கும் சில்லறை காய்கறி சந்தைகள், மளிகைக் கடைகளில் பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் நேற்று அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக மாலை நேரத்தில் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது.
வடபழனி, அரும்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு போன்றபகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் நேற்று காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது. வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, புளி, மிளகாய், மிளகு, கடுகு உள்ளிட்ட மளிகை பொருட்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கினர்.
விற்று தீர்ந்தன
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் சிலர் அடுத்த 10 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். சில பல்பொருள் அங்காடிகளில் அரிசி உள்ளிட்டவை இருப்பில் இல்லாத அளவுக்கு விற்று தீர்ந்தன. அதே போல, சிறு மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு 2 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.
கோயம்பேடு காய்கறி, பழச் சந்தைகளிலும் அதிகாலை முதல்மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனர்.
தாம்பரம் ரயில் நிலையம் எதிரேஉள்ள காய்கறி கடைகளில் நேற்றுகாலை முதலே கூட்டம் அலைமோதியது. சிறு வியாபாரிகளிடம் பேரம்பேசாமல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகைபொருட்களை அள்ளிச் சென்றனர்.
பல்லாவரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் வாரச் சந்தை முன்னெச்சரிக்கையாக நேற்று மூடப்பட்டது. இதனால், அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களும், தங்கள் வீடு அருகே உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT