Last Updated : 20 Mar, 2020 05:02 PM

 

Published : 20 Mar 2020 05:02 PM
Last Updated : 20 Mar 2020 05:02 PM

தேனியில் மக்கள் அதிகம் கூடும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஒருவாரத்திற்கு அடைக்க உத்தரவு: வாட்ஸ்அப் வர்த்தகத்திற்கு மாறும் வியாபாரிகள்

தேனி

தேனியில் வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஒருவாரத்திற்கு அடைக்க நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

இதனால் வாட்ஸ்அப் மூலம் உணவு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகளை வர்த்தகர்கள் செய்து வருகின்றனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேனி மாவட்டம் இதன் எல்லையில் இருப்பதால் இங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரள எல்லைப்பகுதியான குமுளி, கம்பம்மெட்டு, முந்தல் என்று மூன்று இடங்களிலும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்காக சுகாதாரம், வருவாய், காவல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து எல்லை கடந்து வரும் வாகனங்களை கண்காணித்து வருகின்றன.

மேலும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாளை நாடுமுழுவதும் சுயஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஓட்டல், ஜவுளி, நகை உள்ளிட்ட பல்வேறு வர்த்தக சங்கத்தினர் ஒருநாள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் இன்று முதல் தேனியில் உள்ள பல கடைகளை மூடச் சொல்லி நகராட்சி, தொழிலாளர் துறை நல அதிகாரிகள் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

குறைந்தது ஒருவாரத்திற்கு கடைகளை மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் நேற்று பிற்பகல் முதல் தேனியில் உள்ள பெரிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஒருநாள் ஊரடங்கு என்ற நிலையில் ஏறத்தாழ ஒருவாரத்திற்கு மேல் கடைகளை மூடச் சொல்வது வணிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "ஞாயிறு மட்டும் விடுமுறை விட வேண்டும் என்று அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதிகாரிகள் ஒருவாரத்திற்கு கடைக்கு விடுமுறை விட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துச் சென்றுள்ளனர். சமையல், உணவுப் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு தொய்வின்றி கிடைக்கும் வகையில் தற்போது வாட்ஸ்அப் ஆர்டரை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

தேவையான பொருட்கள் விபரங்களை அனுப்பினால் டோர் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு சார்பில் பொது மற்றும் வர்த்தக பகுதிகளில் கைகழுவ சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் குளிர்நிறைந்த பகுதியில் வழக்கத்தை விட கூடுதல் நாட்கள் உயிர்வாழும்.

இதனடிப்படையில் குளிரூட்டப்பட்ட கடைகளை குறைந்தது ஒரு வாரம் மூட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x