Published : 20 Mar 2020 08:44 AM
Last Updated : 20 Mar 2020 08:44 AM
நிர்பயா வழக்கில் தண்டனை வழங்க ஏன் இத்தனை ஆண்டுகள் என, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று (மார்ச் 20) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக, செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, "தூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தனை வருடங்கள் கடந்து அவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய குற்றம் நடக்கும்போது ஏன் இத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது?
கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. காங்கிரஸின் வீழ்ச்சிக்குக் காரணமே நிர்பயா வழக்குதான் என்பார்கள். எதற்காக இத்தனை ஆண்டுகள் காத்துக் கிடந்தோம்? ஏன் அவர்களிடம் இவ்வளவு கனிவான போக்கைக் கையாண்டோம்?
தூக்கு தண்டனை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும். மனித உரிமை ஆணையம் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லும். என்னை மாதிரியானவர்கள் வேண்டும் எனச் சொல்வோம். இம்மாதிரியான குற்றங்களுக்கு ஒரு துளி கூட கருணை காட்ட முடியாது. இறுதியில் இவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு தாய் என்ற முறையில் இந்த முடிவை வரவேற்கிறேன்.
கடுமையான தண்டனை வழங்கினால்தான் குற்றவாளிகளுக்குப் பயம் வரும் என்கின்றனர். ஆனால், தண்டனை வழங்குவதற்கு முன்பே இத்தனை வருடங்கள் குற்றவாளிகளைப் பாதுகாத்தால் அவர்களுக்கு எங்கிருந்து பயம் வரும்? உடனடியான நீதி தேவைப்படுகிறது. இம்மாதிரியான குற்றவாளிகளுக்கு எந்தவித கருணையும் காட்டாமல் உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நம் சமுதாயத்தில் பயம் ஏற்படும்" என குஷ்பு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT