Published : 05 Aug 2015 12:42 PM
Last Updated : 05 Aug 2015 12:42 PM
போராட்டத்தின்போது உடைக்கப்படும் மதுபாட்டில்களுக்கு காப்பீடு பொருந்துமா என்ற குழப்பம் டாஸ்மாக் அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பூரண மதுவிலக்கை அமல் படுத்த வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களின்போது, மதுக்கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் சேதமடைவதும், சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கோவையில் நேற்று முன்தினம் மதுக்கடை ஒன்றை சிலர் அடித்து நொறுக்கி மதுபாட்டில்களுக்கு தீ வைத்தனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சேதம் என்பதால் போலீஸில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற சேதங்கள் எப்படி ஈடுகட்டப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறிய அளவில் ஏற்படும் சேதங்கள் ஊழியர்கள் தலையில் சுமத்தப்படுகின்றன. ஆனால் தீ விபத்து, திருட்டு உள்ளிட்ட இழப்புகள் ஏற்படும்போது, அவை டாஸ்மாக் நிறுவனத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள காப்பீடு மூலம் ஈடுகட்டப்படுகிறது. அதாவது கொள்முதல் விலையில் ரூ.3 லட்சம் வரை இந்த காப்பீட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சாரதாருக்மணி கூறும்போது, 'தீ விபத்து, திருட்டு போன்ற எதிர்பாராத சேதத்துக்கு மட்டுமே இதுவரை காப்பீடு பெறப்பட்டது. ஆனால் முதல்முறையாக கடைகள் அடித்து நொறுக்கப்படும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த வகை சேதம் காப்பீட்டுக்கு பொருந்துமா எனத் தெரியவில்லை. இருப்பினும் சாய்பாபா காலனியில் உள்ள கடை சேதப்படுத்தப்பட்ட போது, போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். காப்பீடு பொருந்தவில்லை என்றால், காரணமானவர்களிடம் வசூலிப்பதா அல்லது வேறு வழி உள்ளதா என்பது ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT