Published : 20 Mar 2020 07:19 AM
Last Updated : 20 Mar 2020 07:19 AM

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

மதுரை

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லை என உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கில் சிபிசிஐடி ஏடிஜிபி சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது: ராமேசுவரம், கீழக்கரை தாலுகா டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் ஜனவரி 23-ல் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின்போது இந்த தேர்வில் டிஎன்பிஎஸ்சி ஆவண எழுத்தர், தட்டச்சர் ஆகியோர் உதவியுடன் பணத்துக்காக தனியார் சிலர் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

2017-ல் குரூப் 2 ஏ தேர்விலும், 2016 விஏஓ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த 3 வழக்குகளிலும் 2019 குரூப் 4 முறைகேடு தொடர்பாக 25 பேர், குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 29 பேர், விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்வுகளில் முறைகேடாக 84 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முறைகேடு செய்து வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்தவர்கள் தனித்தனியாக அழைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்த முறைகேடு டிஎன்பிஎஸ்சி கீழ்நிலை ஊழியர்கள் உதவியுடன் நடைபெற்றுள்ளது. டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லை. அதிகாரிகள் சிலர் பணியில் மெத்தனமாக இருந்துள்ளனர். அதற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முக்கிய கட்டத்தில் உள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டியதில்லை. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x