Published : 20 Mar 2020 06:49 AM
Last Updated : 20 Mar 2020 06:49 AM
காஞ்சிபுரம் / செங்கல்பட்டு / திருவள்ளூர்
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆட்சியர் பொன்னையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழிற்சாலைகளுக்கு வரும் பணியாளர்கள் அனைவரும் கைகழுவும் திரவத்தை கொண்டு கை கழுவ அறிவுறுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் கிருமி நாசினிகளைக் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். மேலும், தொழிற்சாலைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
கரோனா பாதிப்பு குறித்து பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
இதேபோல் பல்வேறு இடங்களில் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொல்லியில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில் உட்பட சில கோயில்களும் மார்ச் 31-ம் தேதிவரை மூடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பஜார் வீதி, காந்தி சாலை உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் குறைவான மக்கள் நடமாட்டமே இருந்தது.
பேருந்துகளில் கிருமி நாசினி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் சாா்பில், பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குன்றத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்துகள், பேருந்து நிலையம், சுகாதார நிலையம், முருகன் கோயில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.
திருப்போரூரில் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
வெளிமாநில பயணிகள்
மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருப்பது தெரியாமல கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து ஏமாற்றமடைந்தனர். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை, கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர். தொல்லியல் துறை பணியாளர், கலைச்சின்னங்களான கிருஷ்ண மண்டபம், மகிஷாசுர மர்த்தினி சிற்பங்களை தண்ணீரால் கழுவி தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
23 கண்காணிப்பு அலுவலர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சி ஒன்றிய அளவில் கண்காணிக்க, உதவி இயக்குநர் நிலையிலான 14 கண்காணிப்பு அலுவலர்கள், வட்ட அளவில் கண்காணிக்க, துணை ஆட்சியர் நிலையிலான 9 கண்காணிப்பு அலுவலர்கள் என 23 கண்காணிப்பு அலுவலர்களை ஆட்சியர் மகேஸ்வரி நியமித்துள்ளார். மேலும், வரும் ஏப்.15-ம்தேதிவரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள், சுவாமி ஊர்வலங்களை நடத்தக் கூடாது எனவும், கோயில்களில் திருமணம் செய்ய புதிதாக பதிவு செய்யக் கூடாது எனவும், தங்கும் விடுதிகளை மூடவேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment