Published : 19 Mar 2020 07:09 PM
Last Updated : 19 Mar 2020 07:09 PM
மோதல் போக்கைக் கைவிட்டு கரோனாவைக் கட்டுப்படுத்த ஆளுநரும் முதல்வரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு உடனடியாக இலவசமாக முகக் கவசம், கிருமி நாசினி தருவதுடன் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை தரக் கோரியுள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
''மத்திய அரசு அறிவுறுத்தல்படி பல்வேறு மாநில அரசுகளும் போர்க்கால அடிபப்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவது போல் புதுச்சேரி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சாதாரண நோய்களுக்கே மருந்து, மாத்திரை இல்லை என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் நிர்வாகிகளை அழைத்து அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சைகளுக்கும், தனிப் பிரிவுகளும் ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கும் தேவையான கரோனா வைரஸை தடுக்கும் கவச ஆடைகள் வாங்க துரிதப்படுத்த வேண்டும்.
மக்களுக்கு பொது இடங்களிலும், ரேஷன் கடைகளிலும் இலவசமாக முகக் கவசம், கிருமி நாசினிகள், சோப்புகள் தர ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் குழுக்கள் மூலமாகவும் விநியோகம் செய்ய வேண்டும். மாநில எல்லையில் நுழையும் அனைத்து ரயில், பஸ் பயணிகளுக்கும் சோதனைக் கருவிகள் மூலம் முறையாக சோதனை செய்ய வேண்டும்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். நோய்த் தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
உயிர் காக்கும் சுவாசக் கருவியான வென்டிலேட்டர்கள் வாங்க அரசு உடனே நடவடிக்கை எடுப்பது அவசியம். தற்போது கிருமி நாசினிகளுக்கும், முகக் கவசத்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை அரசு சரி செய்ய வேண்டும். நகரங்களை மட்டும் கவனிப்பது போதாது. விழிப்புணர்வை கிராமப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் மோதல் போக்கைக் கைவிட்டு போர்க்கால அடிப்படையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம். துப்புரவுப் பணிகளை முடுக்கி விட்டு உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்குப் பாதுகாப்பான உடைகள், காலணிகள், முககவசம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
சாதாரண மக்கள், கூலித் தொழிலாளர்கள் வருவாய் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், சிவப்பு அட்டை தாரர்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை தர வேண்டும்.
மக்கள் பீதி அடையாமல் தற்காப்பு நடவடிக்கைகளில் உடன் இறங்குவது அவசியம். துரிதமான சிகிச்சை அளிக்க விரைந்த நடவடிக்கை தேவை''.
இவ்வாறு ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT