Published : 19 Mar 2020 04:13 PM
Last Updated : 19 Mar 2020 04:13 PM
நெல்லையில் கரோனா அறிகுறியுடன் 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்; இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பியதால் 30 பேர் அவர்தம் வீடுகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள் உள்ளிட்டவற்றை வரும் மார்ச் 31ம் தேதி வரை அடைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் இன்று மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். முகக்கவசம் தயாரிப்பை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா அறிகுறிகளுடன் நெல்லை மாவட்டத்தில் கரோனா அறிகுறிகளுக்காக 8 பேர் அரசு மருத்துவமனையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தாலி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் வந்த 30 பேர் வீடுகளிலேயே வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு எந்தக் கட்டுபாடும் விதிக்கப்படவில்லை.
முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை தாசில்தார்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
மேலும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணி புரிவதற்கான கையுறை மற்றும் முகக் கவசங்கள் தேவை அதிகம் இருப்பதால் அவற்றை முதலில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயார் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
அதேபோல், அரசு அலுவலர்கள் பணியில் இருப்பதால் அவர்களின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் ஆர்டர் கொடுத்தால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர்களுக்கும் தயார் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT