Published : 19 Mar 2020 03:52 PM
Last Updated : 19 Mar 2020 03:52 PM
கரோனா பாதிப்பு எதிரொலியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களை உடனடியாக மூடும்படி டீன் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். இதனால் நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் கடுமையாகப் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கரோனா நோய் பாதிப்பு தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
இந்நிலையில் கரோனாவுக்காக தனி வார்டுகளை உருவாக்கியுள்ள ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் புறநோயாளிகள் ஆயிரக்கணக்கானோர், உள்நோயாளிகள், நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், உடனிருக்கும் அட்டெண்டர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது மருத்துவமனை வளாகத்தில் உள்ள 4 உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்டவை ஆகும். தற்போது இவை அனைத்தையும் முட உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை மட்டும் மூட உத்தரவிடப்படவில்லை. இதனால் அம்மா உணவகத்தில் கூட்டம் கூடும் நிலை ஏற்படும்.
இதுதவிர நோயாளிகளுடன் இருக்கும் அட்டெண்டர்கள், ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியோர் உணவுத் தேவைக்கும், பால் போன்ற தேவைக்கும் மருத்துவமனையைக் கடந்து வெளியில் சென்று அலையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT