Published : 19 Mar 2020 01:56 PM
Last Updated : 19 Mar 2020 01:56 PM
பட்டிசேரி எனும் இடத்தில் கேரள அரசு அணை கட்டுவதை காவிரி தீர்ப்பாயம் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று (மார்ச் 19) பூஜ்ஜிய நேரத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
"தமிழக அரசிடமோ, காவிரி தீர்ப்பாயத்திடமோ ஒப்புதல் எதுவும் பெறாமல், கேரள அரசு, பட்டிசேரி என்ற இடத்தில் ஒரு தடுப்பணை கட்டிக் கொண்டிருக்கின்றது. முன்பு அதன் உயரம் 15 அடிகள்தான். இப்போது, 30 மீட்டர் உயரத்திற்குக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால், பாம்பாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டின் அமராவதி அணைக்கு வர வேண்டிய நீர் தடைப்பட்டுப் போகும்.
அமராவதி அணையின் பாசனப் பரப்பு 48 ஆயிரத்து 500 ஏக்கர் மற்றும் புதிய பாசனப் பரப்பு 21 ஆயிரத்து 500 ஏக்கர் ஆகும். பழைய ஆயக்கட்டுதாரர்களுக்கு 12.66 டிஎம்சி மற்றும் புதிய ஆயக்கட்டுதாரர்களுக்கு 4.97 டிஎம்சி நீர் தேவை. மேலும், கரூர் பகுதியின் குடிநீர் தேவைக்காக 0.514 டிஎம்சி மற்றும் தொழில் பணிகளுக்காக 0.492 டிஎம்சி நீர் தேவை. எனவே, ஒட்டுமொத்தமாக, ஓர் ஆண்டுக்கு, 18.64 டிஎம்சி நீர் தேவை.
காவிரி தீர்ப்பாயம், செங்கலாறு அணையில் இருந்து 0.800 நீர் மட்டுமே கேரளத்திற்கு ஒதுக்கி இருக்கின்றது. ஆனால், அவர்கள் பட்டிசேரியில், 2 டிஎம்சி கொள்ளளவுக்கு அணையைக் கட்டுகின்றனர்.
1966 முதல் 2019 டிசம்பர் வரை, இதுவரையிலும் அமராவதி அணைக்குப் போதிய நீர் வரவில்லை.
இந்த நிலையில், கேரள அரசு புதிய தடுப்பணை கட்டுமானால், தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில், கரும்பு மற்றும் ஏனைய பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, காவிரி தீர்ப்பாயம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, கேரளம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்"
இவ்வாறு வைகோ பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT