Published : 19 Mar 2020 09:17 AM
Last Updated : 19 Mar 2020 09:17 AM
ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் சிறு, குறுந்தொழில்துறையை முடக்கியுள்ளது கரோனா வைரஸ். மத்திய, மாநில அரசுகளின் கருணைப் பார்வையேதங்களை மீட்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் சிறு, குறுந்தொழில்முனைவோர்.
தமிழகத்தில் ஏறத்தாழ 10 லட்சம் சிறு, குறுந் தொழில்நிறுவனங்களை நம்பி சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 50,000 சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. தமிழகம் மட்டுமின்றி, பிஹார், ராஜஸ்தான், அசாமி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது. எனினும், 1998 முதல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான சிறு, குறுந் தொழில் துறை, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை கடும் நெருக்கடிக்குத் தள்ளியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது ஜாப் ஆர்டர்கள் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான குறுந்தொழில்கூடங்கள் மூடப்பட்டன. இதிலிருந்து கொஞ்சம் மீண்டு வரும் சூழலில், தற்போதைய கரோனா வைரஸ் தாக்குதல் சிறு, குறுந்தொழில்துறையிலும் எதிரொலித்து, அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்லது.
இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத் (டேக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் தொழில், வணிகம் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த பொருளாதாரத் துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழில் நகரமான கோவையில் அனைத்துத் தொழில்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
கோவையின் மிக முக்கிய உற்பத்தியான மோட்டார் பம்புசெட்டுகள்,வெட் கிரைண்டர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பிவைக்கப்படும். இந்நிலையில், தென்மாநிலங்களின் கொள்முதல் வெகுவாகக் குறைந்துவிட்டது. கரோனா வைரஸ் தாக்குதலால் பெருமளவு வியாபாரம் முடங்கிவிட்டது.
இதனால், சிறு, குறுந்தொழில் கூடங்களில் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் தற்போதைய நெருக்கடியில் இருந்து தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும். தொழில்களின் உற்பத்தித் திறனுக்குத் தக்கவாறு ரூ.50,000 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் தொழில்முனைவோர் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த ஓராண்டு காலநீட்டிப்பு தர வேண்டும். அதற்கான வட்டி, அபராதம் வட்டிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களை, சிறு, குறுந்தொழில் நிறுவனங் களிடமிருந்துதான் கொள்முதல் செய்யவேண்டும் என்று விதி வகுத்து, அதை முறையாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT