Last Updated : 19 Mar, 2020 08:18 AM

 

Published : 19 Mar 2020 08:18 AM
Last Updated : 19 Mar 2020 08:18 AM

முகக்கவசம் தயாரிக்கும் மகளிர் குழுக்கள்- நெல்லையில் ரூ.7-க்கு வழங்க திட்டம்

கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் முகக்கவசம் அணிய தொடங்கியுள்ளதால் திருநெல்வேலியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவமனைகள், துப்புரவு பணியாளர்களுக்கு இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் கொண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. எனவே, மக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர். தேவையைக் கருத்தில்கொண்டு அவற்றின் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளனர். ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட முகக்கவசம் தற்போது ரூ.17 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. பல நகரங்களில் கடும் தட்டுப் பாடு நிலவுகிறது.

தட்டுப்பாட்டை போக்கவும், குறைந்த விலையில் முகக்கவசம் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முகக்கவசம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

முழு அளவில் உற்பத்தி

“காட்டன் துணி மற்றும் எலாஸ்டிக் ஆகியவற்றைக் கொண்டு முகக்கவசம் தயாரிப்பது குறித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள தையல் தொழிலில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 200 பேருக்கு கடந்த 2 நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று முதல் முழு அளவில் உற்பத்தி நடைபெறுகிறது” என, திருநெல்வேலி மகளிர் திட்ட மேலாளர் ஏ.சுபா தெரிவித்தார்.

தொடரும் பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோனி பர்னான்டோ கூறும்போது, ‘`திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மகளிர் திட்ட வணிக வளாகத்தில் மகளிர் குழுவினருக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

1 மணி நேரத்துக்கு 20 முகக்கவசங்களை தயாரிக்க முடியும். மகளிர் குழுக்கள் தயாரிக்கும் முகக்கவசங்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கும், மாநகராட்சி, நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கும் கொடுக்கவுள்ளோம்.

அடுத்தகட்டமாக கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் இவை விற்பனை செய்யப்படும். காட்டன் துணியில் தயாரிக்கப்படும் இந்த முககவசங்களை சலவை செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு முகக்கவசத்தை ரூ.7-க்கு விற்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x