Published : 19 Mar 2020 07:44 AM
Last Updated : 19 Mar 2020 07:44 AM

மக்கள் அதிகம் கூடுவதால் தி.நகர் பகுதி கடைகள் மூடப்பட்டன; சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் புறப்பட்டனர்- வருவாய் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆய்வு

கரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசின் உத்தரவின்படி சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கூட்டத்துடன் எப்போதும் பரபரப்பாக இருக்கும் தெரு வெறிச்சோடி காணப்பட்டது.

சென்னை

கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகியவற்றில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் அப்பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களிடம், கரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, கடைகளை மூடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நேற்று கடைகள் திறக்கப்படவில்லை. மேலும் கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்களிடம் இதுவரைபணி செய்ததற்கான ஊதியத்தை வழங்கி, மீண்டும் அழைக்கும்போது வந்தால் போதும் எனக் கூறி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வின்போது வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 58 ஆயிரம் பள்ளிகள், 2,051 கல்லூரிகள், 82,681 அங்கன்வாடி மையங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள், 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், 560-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள், 5,310 மதுக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் 5,592 வழிபாட்டு தலங்கள், 7,242 பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், 327 பேருந்து பணிமனைகள், 13,195 பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் கிருமி நீக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வியாபாரிகள் ஆதரவு

மாநில எல்லைகளில் உள்ள 89 சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நெரிசல் இல்லாத பகுதிகளில் சிறு கடைகளை அடைக்க சொல்லவில்லை. நெரிசல் மிகுந்த தியாகராயநகர் பகுதியில் தான்அடைக்க சொல்லிஇருக்கிறோம். இதற்குவியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு அளித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். அரசுவெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x