Published : 18 Mar 2020 08:02 PM
Last Updated : 18 Mar 2020 08:02 PM
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காலியான 6 எம்.பி.க்களுக்கான இடத்துக்குப் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியில்லாததால் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்துக்கு 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் கோட்டா உள்ளது. இதில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் வீதம் வெவ்வேறு காலகட்டத்தில் மும்முறை மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். தற்போது 2014-ம் ஆண்டு தேர்வான எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிந்ததால் புதிய எம்.பி.க்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது.
திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கவில்லை. மூத்த உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது, ஏற்கெனவே மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்டு வைகோ போட்டியிட்டதால் மாற்றப்பட்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அதிமுகவில் கூட்டணிக் கட்சிகள் நெருக்குதல் அதிகமாக இருந்தது. தேமுதிக நேரடியாக முதல்வரிடம் பேசியது. பிரேமலதா பகிரங்கமாக பேட்டி அளித்தார். ஆனால் யாரும் எதிர்பாராதவண்ணம் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி இருவரில் கே.பி.முனுசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கரூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த தம்பிதுரைக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இவர்கள் தவிர வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடக்கும் வாய்ப்பு இல்லாததால் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழை சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் வழங்கினார்.
தேர்வு செய்யப்பட்ட அனைவரும் அடுத்து வரும் ஆறாண்டுகளுக்கு (2026-ம் ஆண்டு வரை) மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகிப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT