Published : 18 Mar 2020 04:52 PM
Last Updated : 18 Mar 2020 04:52 PM

கரோனா வைரஸ் பாதிப்பு; அனைத்து வங்கிக் கடன்களுக்கு ஆண்டு இறுதி வரை விலக்கு: சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை

கரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், தொழில்களும் முடங்கியுள்ளதால் குடிமக்கள் வங்கிக் கடனை அடைப்பது சிரமம். எனவே, ஓராண்டுக்கு வங்கிக் கடன்களை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரையும் ஒன்றுகூடுவது தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டுள்ளன. பங்குச் சந்தை வரலாறு காணாத அளவு முடங்கிப் போயுள்ளது.

போக்குவரத்துச் சேவை, விமானச் சேவை முடங்கியதால் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைவரும் ஒருவர் சார்ந்து ஒருவர் இயங்குவதால் பெரிய அளவிலான முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கடன் வாங்கி தொழில் புரிவோர், கடன் வாங்கியுள்ளவர்கள், இஎம்ஐ கட்டுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“கோவிட்-19 நெருக்கடி காரணமாக பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தியாவில் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் எதுவுமில்லாமல் ஊழியர்களை நிறுவனங்கள் பணி நீக்கம் செய்கிறது. இந்த ஊழியர்களும், பாதிக்கப்படும் வணிகர்களும் எவ்வாறு வங்கிக் கடன்களை மீண்டும் திருப்பிச் செலுத்த முடியும்?

ஆகவே, அனைத்துக் கடன்களையும், அசல் மற்றும் வட்டி நிலுவைத் தொகையைக் கட்ட இந்த ஆண்டு இறுதி வரை விலக்கு அளிக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது கோரிக்கைக்குக் கீழே நெட்டிசன்கள் பலத்த ஆதரவுடன் வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x