Published : 18 Mar 2020 01:57 PM
Last Updated : 18 Mar 2020 01:57 PM
ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மூடவேண்டும் என அறிவித்திருப்பது உணவுப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்கும் கடைகளை மூடுவதாக அர்த்தம் அல்ல என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டது. மீறித் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்தது.
இந்நிலையில் இதைப் பயன்படுத்தி உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை அடைப்பதும், பொருட்களை அதிக விலைக்கு விற்பதும் நடந்து வருகிறது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
“சென்னையில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மட்டுமே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழம், காய்கறிகள், இறைச்சி, மீன் மார்க்கெட் உள்ளிட்ட மற்ற கடைகள், சிறிய கடைகளுக்குப் பொருந்ததாது.
நமது முக்கியக் குறிக்கோள் வைரஸ் பரவலைத் தடுப்பது மட்டுமே. சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் நடவடிக்கை அல்ல. தயவுசெய்து இந்த விவரத்தை தெளிவாக அனைவரிடமும் கொண்டுசென்று வீண் வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும்.
இத்தகைய வதந்திகளைப் பரப்பும் நபர்கள் குற்றமிழைத்தவர்களாகக் கருதி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்டுவோம்” என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT