Published : 18 Mar 2020 10:10 AM
Last Updated : 18 Mar 2020 10:10 AM

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே தடங்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? - வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

வைகோ: கோப்புப்படம்

புதுடெல்லி

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே தடங்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, ரயில்வே துறை அமைச்சகத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் வைகோ, சண்முகம் ஆகியோர் எழுத்துபூர்வமாக அனுப்பிய கேள்விகள்:

"இந்தியா முழுமையும் புதிய ரயில் தடங்கள் அமைப்பதற்கான பல திட்டங்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளனவா? அவ்வாறு இருப்பின், திட்டவாரியான விவரங்களைத் தருக. மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றப் போதிய நிதி ஒதுக்கப்படுமா? எப்போது நிறைவு பெறும்?" ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கம்:

"தற்போது, இந்தியா முழுமையும் 49 ஆயிரத்து 69 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய தடங்கள் அமைக்கின்ற 498 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை, திட்டம் வகுத்தல், நிதி ஒதுக்குதல், நிறைவேற்றுதல் எனப் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவற்றுள், 8,979 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணிகள், 2019 மார்ச் மாதம் நிறைவு பெற்றுவிட்டன.

ரயில்வே திட்டங்கள், மாநில வாரியாக அல்லாமல், கோட்ட வாரியாக நிறைவேற்றப்படுகின்றன. மேற்கண்ட 498 திட்டங்களுள் 22 திட்டங்கள், 2,519 கிலோ மீட்டர் தொலைவுக்கு, ரூபாய் 21 ஆயிரத்து 579 கோடி செலவில் நிறைவேற்றப்படுகின்றன. 730 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணிகள் நிறைவு அடைந்துள்ளன. மற்றவை, பெரும்பகுதி அல்லது ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேற்கண்ட திட்டப் பணிகள் குறித்த முழுவிவரங்களும், இந்திய ரயில்வேயின் இணையதளத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்: கோப்புப்படம்

புதிய தடங்கள் அமைத்தல், இரட்டைத் தடங்கள் மற்றும் அகன்ற வழிப் பாதையாக ஆக்குதல் ஆகிய திட்டங்களுக்கு, 2009-14 காலகட்டத்தில், ஓராண்டுக்கு 11 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2014-19 காலகட்டத்தில், ஓராண்டுக்கு 26 ஆயிரத்து 26 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இது, 126 விழுக்காடு உயர்வு ஆகும்.

மேற்கண்ட திட்டங்களுக்காக, 2019-20 ஆண்டுகளில் ரூ 38 ஆயிரத்து 803 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதான், இதுவரையிலும் ஆகக்கூடுதலான ஒதுக்கீடு ஆகும்.

தமிழ்நாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:

உள்கட்டமைப்புப் பணிகள், பாதுகாப்பு வசதிகளுக்கhக, 2014-19 காலகட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக ரூ.1,979 கோடி ஒதுக்கப்பட்டது.

2019-20 ஆம் ஆண்டுக்கு, ரூ.2,410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செலவினங்கள், ரூ.2,812 கோடியாக இருக்கும்.

ரயில்வே திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. நிலம் கையகப்படுத்துதல், காடுகள் பாதுகாப்புத்துறையிடம் இருந்து தடையில்லாச் சான்று பெறுதல், புதிய வழித்தடங்களில் நிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும், ஏற்கெனவே உள்ள வசதிகளை இடம் மாற்றுதல், சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு துறைகளிடம் இசைவு பெறுதல், நிலச்சரிவு, பெருமழை, வெள்ளம், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், நீதிமன்றங்களின் தடை ஆணைகள், ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், காலநிலை மாற்றங்களால் பணி பாதிப்பு போன்ற கhரணிகளால், பணிகள் தடைபடுகின்றன.

எனவே, திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு, கால வரையறை எதுவும் தீர்மானிக்க இயலாது"

இவ்வாறு அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x