Published : 18 Mar 2020 07:11 AM
Last Updated : 18 Mar 2020 07:11 AM
தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் 480-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலியான பிஎச்.டி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 554 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 3.8 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சிலர்,போலியான பிஎச்.டி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளதாக பல்கலை.க்குபுகார்கள் வந்தன. இதையடுத்து ஆசிரியர்களின் பிஎச்.டி சான்றிதழ்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து உண்மைத்தன்மை சான்று பெற்றுமார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணாபல்கலை. சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதுதவிர இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலை. அதிகாரிகள் குழுவும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டது. அப்போது பேராசிரியர்கள் பலர், போலிபிஎச்.டி சான்றுகளைச் சமர்ப்பித்துமுறைகேடாகப் பணியில் சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலை. அதிகாரிகள் கூறியதாவது:
புகார்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் சில தனியார் கல்லூரி பேராசிரியர்களின் பிஎச்.டி சான்றிதழ் போலியானவை எனக் கண்டறியப்பட்டது.
இதையடுத்து எல்லா கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதில் 480-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்கள் போலி பிஎச்.டி சான்றுகளை அளித்து பணியில்சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி பிஹார், தெலங்கானா, மகாராஷ்டிரா உட்பட வட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்காமலேயே பணம் கொடுத்து பிஎச்.டி சான்றிதழைப்பெற்றுள்ளனர். சிலர் போலியானபல்கலைக்கழகங்களிலும் பட்டங்களை வாங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்போது கல்லூரிகளில் நடத்தப்படும் ஆய்வுப் பணிகளை விரிவாக மேற்கொள்ள அதிகாரிகள் குழுவுக்குஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆய்வுகள் முடிந்தபின் போலி ஆவணங்கள் தந்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உரிய தகுதிகள் இல்லை
இதுதொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.எம்.கார்த்திக் கூறும்போது, ‘‘மாநிலம் முழுவதும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அதில் 30 சதவீத ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக, உரிய தகுதிகள் இல்லாமலும், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தும் பணிபுரிகின்றனர். குறைந்த ஊதியம் வழங்கினால் போதும் என்பதால் கல்லூரி நிர்வாகங்களும் அதற்குத் துணைபோகின்றன. எனவே, மாணவர்கள் நலன் கருதி இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT