Published : 18 Mar 2020 07:10 AM
Last Updated : 18 Mar 2020 07:10 AM

எச்சரிக்கையாக இருந்தாலே போதுமானது; கோவிட்-19 காய்ச்சலுக்கு பயப்படத் தேவையில்லை- நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் ஜி.வேல்குமார் அறிவுரை

மதுரை

உலகையே அச்சுறுத்தும் கோவிட்-19 வைரஸ்காய்ச்சல் குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனால் கவனமும், எச்சரிக்கையும் தேவை என்று நுரையீரல் மருத்துவ நிபுணர் ஜி. வேல்குமார் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு 3,213 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சல் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா, சுவிட்சர்லாந்த் உட்பட ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் காய்ச்சலால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சலுக்கு நாடு முழுவதும் 125-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினாலும் இந்த காய்ச்சல் பற்றிய அச்சம் மக்களிடம் போகவில்லை.

நுரையீரல் பாதிக்கும்

இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், உயிர் காக்கும் மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளன. குறிப்பாக இந்த வைரஸ் காய்ச்சல் கடுமையாகும்போது நோயாளிகளின் நுரையீரல் பாதிக்கும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் போன்றஉயிர் காக்கும் கருவிகள் பற்றாக்குறையாக உள்ளன. எனவே தனியார் மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மதுரை மீனாட்சி மிஷன்மருத்துவமனை நுரையீரல் நோய் சிறப்புமருத்துவ நிபுணர் ஜி.வேல்குமார் கூறியதாவது: கோவிட்-19 காய்ச்சல் குறித்துபயப்படத் தேவையில்லை. ஆனால்கவனம், எச்சரிக்கை தேவை. இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், சிலருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கும்.

இந்த வைரஸ் காய்ச்சல் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு நேரடியாகப் பரவக்கூடிய வாய்ப்புஉள்ளது. இருமும்போதும், தும்பும் போதும் வெளிப்படும் வைரஸ் கிருமிகள் மேஜை, டேபிள் போன்ற இடங்களில் 9மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை உயிருடன் இருக்கக்கூடிய தன்மை உள்ளது.

அதனால் இருமல், சளி, மூச்சுத் திணறல், காய்ச்சல் ஆகியவை இருந்தால் அருகில்உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். இதை கடைபிடித்தால் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும்.

கை கழுவுவது அவசியம்

இருமல், தும்மல் வரும்போது வாயில் துணி வைத்துக் கொள்ள வேண்டும். தொடும்போதும் மற்றவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. அதனால், கைகளை நன்றாகக் கழுவவேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறையாவது சோப்புபோட்டு நன்றாகக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவும்போது குறைந்தது 30 நொடிகளாவது கை கழுவ வேண்டும்.

முக்கியமாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள், வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறவர்களுக்கு இந்தக் காய்ச்சல் வந்தால் பாதிப்பு அதிகம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x