Published : 17 Mar 2020 04:52 PM
Last Updated : 17 Mar 2020 04:52 PM
தடய அறிவியல் துறையை நாடு தழுவிய அளவில் மேம்படுத்த வேண்டும், Forensic odontology, Victimology, Criminology உள்ளிட்ட பாடங்களை தேசிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று மக்களவையில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் இன்று திருமாவளவன் பேசியதாவது:
“குற்றப் புலனாய்வின்போது காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பாக, துணையாக இருப்பது தடய அறிவியல் துறை. தடய அறிவியல் துறையை நாடு தழுவிய அளவில் மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக, தடய அறிவியல் துறை தொடர்பான கல்வி, அனைத்து மாநிலங்களிலும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அது தொடர்பான வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். இளநிலை, முதுநிலை, பட்டயக் கல்வி, மற்றும் ஆராய்ச்சிக் கல்வி போன்றவற்றை எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, பற்கள் புலனாய்வுக்கு மிக முக்கியமான தடயமாக இருக்கிறது. அடையாளம் காணப்படாத ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டால் அதிலே பற்கள் என்பது மிக முக்கியமான ஒரு தடயம். ஆகவே, பற்கள் புலனாய்வு (Forensic odontology) என்பது ஒரு முக்கியமான கல்வி.
அதை நாடு தழுவிய அளவில் வளர்த்தெடுப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு (பாதிக்கப்பட்டவர்கள் உளவியல், சமூகவியல் பின்னணி, குற்றமிழைத்தவர் பாதிக்கப்பட்டவர் இடையே உள்ள உறவு முறைகள், குற்ற நீதி நடைமுறைகள்) குறித்த -Victimology, Criminology (குற்றவியல்) உள்ளிட்ட பாடங்களை தேசிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT