Published : 17 Mar 2020 07:52 AM
Last Updated : 17 Mar 2020 07:52 AM
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக, திமுக, தமாகா வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக பேரவைச் செயலர் கே.சீனிவாசன் அறிவித்துள்ளார். இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்துக்கு 18 உறுப்பினர் இடங்கள் உள்ளன. இதில், அதிமுகவைச் சேர்ந்த சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் என 6 உறுப்பினர்கள் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 6 இடங்களில் தலா 3 இடங்கள் அதிமுக, திமுகவுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சி யான தமாகா சார்பில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனும் மனு தாக்கல் செய்தனர்.
இதுதவிர, சுயேச்சைகள் 3 பேர் மனுதாக்கல் செய்தனர்.மனுதாக்கல் கடந்த 13-ம் தேதிமுடிவடைந்த நிலையில், நேற்றுமனுக்கள் பரிசீலனை நடந்தது.
சட்டப்பேரவை செயலரும், மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கே.சீனிவாசன் அறையில் நடைபெற்ற பரிசீலனையில், 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிவு இல்லாததால், சுயேச்சைகளாக மனு தாக்கல் செய்த 3பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுக, திமுக, தமாகா சார்பில் அளிக்கப்பட்ட 6 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை வரை அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில், 6 இடங்களுக்கு6 வேட்பாளர்கள் மனுக்கள்மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதால், 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக நாளை மாலை அறிவிப்பு வெளியாகும் என பேரவை செய லக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT