Published : 17 Mar 2020 07:50 AM
Last Updated : 17 Mar 2020 07:50 AM
கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 16 மாவட்டங்களில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் மற்றும் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அதிக அளவில் கூடும் விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, கைகழுவும் திரவம் கொண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள், கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்டது. மேலும், சட்டப்பேரவை கூட்ட அரங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நேற்று முதல் சட்டப்பேரவை அரங்க கட்டிடத்தின் 4-ம் எண் நுழைவு வாயில் மற்றும் 6-ம் எண் நுழைவு வாயில்களில் அங்கு வரும் உறுப்பினர்கள், அலுவலர்கள், பார்வையாளர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை சுகாதாரத் துறையினர் பரிசோதித்து, அவர்களின் விவரங்களைக் குறித்துக் கொண்டனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேரவைத்தலைவர் பி.தனபால் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டப்பேரவையில் பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று (நேற்று) பிற்பகல் முதல் மறு உத்தரவிடும்வரை பேரவை நிகழ்ச்சிகளைக் காண பார்வையாளர்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ என்று அறிவித்தார்.
இதையடுத்து, நேற்று பிற்பகல் முதல் பார்வையாளர்கள் யாரும் பேரவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT