Published : 17 Mar 2020 07:45 AM
Last Updated : 17 Mar 2020 07:45 AM

விடுமுறை அறிவிப்பை தவறாக பயன்படுத்தி குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை

விடுமுறையைப் பயன்படுத்தி பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன இதை தவறாகப் பயன்படுத்தி குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியார், அரசு ஒருங்கிணைப்பாளர்கள் மார்ச் 31-ம் தேதிவரை புதிய சுற்றுலாவுக்கு பொதுமக்களை அழைத்துச் செல்லக் கூடாது. சுற்றுலாப் பயணிகள் தங்குமிடம் அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும். புதிய முன்பதிவும் செய்யக்கூடாது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத்தலங்களில் கூட்டம் கூடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பற்றி யாரேனும் பொய்யானசெய்தி, வதந்தி அல்லது தேவை யற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு வடிவிலோ பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும் பொது இடங்களில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத்தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள், திருமணங்கள் மற்றும் இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தனிமனித சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தனி நபர் சுகாதாரத்தை பேணவும், குறிப்பாக வீட்டுக்குள் நுழையும்போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். கையை சுத்தம் செய்யாமல் முகத்தை தொடாதீர்கள்.

பெற்றோர் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டுக்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்திக் கொண்ட பின் செல்ல வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும். கோவிட்-19 நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கோவிட்-19 வைரஸ் தொடர்பாக தெரிந்து கொள்ள சுகாதாரத் துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. 104, 044-29510400, 044-29510500, 94443 40496 மறறும் 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கோவிட்-19 வைரஸை தடுப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர்ந்து முழுமையாக மேற்கொண்டு தமிழக அரசு எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பற்றி யாரேனும் பொய்யான செய்தி, வதந்தி அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு வடிவிலோ பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x