Published : 16 Mar 2020 08:57 PM
Last Updated : 16 Mar 2020 08:57 PM
கத்தார் மற்றும் தைவானிலிருந்து கோவை வந்துள்ள இருவருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
‘கோவிட்-19’ வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் கோவையில் இன்று நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
''கோவிட்-19 வைரஸ் தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. கத்தார் மற்றும் தைவானிலிருந்து கோவை வந்துள்ள இருவருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணிநேரமும் பணியாற்றும் வகையில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் ஆகியவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்று இருப்பதால், மாநிலத்தின் எல்லையோரங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவர் குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நமது மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் கூடுமானவரையில் கேரள மாநிலத்திற்குச் செல்வதைத் தவிர்த்து இங்கேயே தங்கியிருக்க அந்தந்தக் கல்லூரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக தனியார் கல்லூரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுபோலவே, தனியார் தொழிற்சாலைகள், அமைப்புகள், மத அமைப்புகள் உள்ளிட்டவர்கள் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது வழிபாட்டுத் தலங்களில் தூய்மை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு ஆட்சியர் ராசாமணி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT