Published : 16 Mar 2020 03:32 PM
Last Updated : 16 Mar 2020 03:32 PM
கரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க தொற்றுநோய் தடுப்பு குழு அமைத்து கண்காணிப்படுவதாக மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
மதுரையில் கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "மதுரையில் விமான நிலையம் இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பாக கரோனா தொற்றுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏதேனும் கரோனா அறிகுறி இருந்தால் அவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி சிகிச்சைக்கு அனுப்பிவைக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா அறிகுறிகள் இல்லாத வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளையும் கூட தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் இதுவரை கரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. இருப்பினும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் அறிவிப்பின்படி, மதுரையில் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துள்ளோம். அங்கன்வாடி, நர்சரி பள்ளிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொற்றுநோய் தடுப்பு குழு அமைத்து கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஹைப்போ க்ளோரைடு சொல்யூஷன் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மாநகராட்சி, முனிசிபல் நகராட்சி, ஊராட்சி அமைப்புகளுக்கும் அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பொது இடங்களிலும் ஸ்டாண்டீஸ், பேனர், போஸ்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பெரிய கூட்டங்களை மக்கள் தவிர்ப்பது நல்லது.
பொதுநிகழ்ச்சிகளை அரசாங்கம் இன்னும் தடை செய்யவில்லை. அதேவேளையில், பொது நிகழ்ச்சிகளை மக்கள் தாமாகவே ரத்து செய்ய வேண்டுகிறோம்.
கோயில்களிலும் மக்களுக்கு கோவிட் 19 அறிகுறிகள் தென்படுகிறதா எனக் கண்காணிக்கப்படுகிறது. வழிபாட்டுத் தலங்களில் கிருமி நாசினி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT