Published : 16 Mar 2020 02:51 PM
Last Updated : 16 Mar 2020 02:51 PM
கரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு ஷாகின் பாக் வழி இருப்புப் போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தலாம் என அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக சிறுபான்மை மக்களும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாகப் போராட்டம் நடத்தி வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி, கோட்டை நோக்கி பேரணி என போராட்டம் வலுத்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அன்று முதல் ஷாகின் பாக் வழி இருப்புப் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன.
இந்தப் போராட்டத்தை ஒட்டி தமிழக முதல்வர் இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் இன்றும் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஒரு அறிக்கை இன்று வெளியானது. அதில் கரோனா தீவிரத்தை அடுத்து ஷாகின் பாக் வழி இருப்புப் போராட்டங்களைக் கைவிடுமாறு இஸ்லாமியக் கூட்டமைப்பு போராடும் இஸ்லாமிய மக்களுக்கு வேண்டுகோள் விடுதுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கை:
“உலக அளவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாலும், நம் நாடு இதை தேசியப் பேரிடர் என்று அறிவித்திருப்பதாலும், நாட்டு மக்களின் உயிரையும், நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து ஷாகின் பாக் வழி இருப்புப் போராட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு பொதுமக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
நாட்டு மக்கள் மீது அக்கறையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு இம்முடிவை மேற்கொண்டுள்ளது. எனினும் வருங்காலத்தில் தமிழகத்தில் என்பிஆரை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்குமேயானால் நாம் தொடர் இருப்புப் போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம் என்பதையும் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் என்பிஆரை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முற்படுமேயானால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...