Published : 16 Mar 2020 01:28 PM
Last Updated : 16 Mar 2020 01:28 PM
சிஏஏ, என்சிஆர், என்பிஆர் சட்டங்களின் பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இன்று (16-03-2020) எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் ஆற்றிய உரை:
“தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அதில் கலந்துகொண்ட அமைப்புகளின் நிர்வாகிகள், எடுத்து வைத்திருக்கும் ஐயப்பாடுகள், அதில் சொல்லியிருக்கும் அம்சங்கள் என்ன என்பதை இந்த அவை தெரிந்துகொள்ள விரும்புகிறது.
அதற்குத் தலைமைச் செயலாளர் என்ன விளக்கம் தந்திருக்கிறார் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவிப்பதைக் கடமையாக நான் கருதுகிறேன். எனவே, இஸ்லாமியப் பெருமக்கள் எடுத்து வைத்திருக்கக்கூடிய அந்தக் கருத்துகளை இந்த அவையில் தெரிவிப்பது கடமை என மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன்.
இஸ்லாமியத் தலைவர்களை மட்டும் தலைமைச் செயலாளர் அழைத்துப் பேசியிருப்பது, ஒரு கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் பாதிக்கப்படக் கூடியவர்கள் இஸ்லாமியப் பெருமக்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மக்கள்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இந்தச் சட்டத்தால் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அச்ச உணர்வோடு இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இதையும் கருத்தில் கொண்டு தலைமைச் செயலாளர் கூட்டிய கூட்டத்தைப் போல ஏதோ ஒரு தனிப்பட்ட அமைப்பை மட்டும் அழைத்துப் பேசாமல், இதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னால், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்டி, இதுகுறித்து விவாதித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்”.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment