Published : 16 Mar 2020 12:37 PM
Last Updated : 16 Mar 2020 12:37 PM
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் இன்று காலை ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், போக்குவரத்து மையங்கள், வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகளில் என்னென்ன மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு முறையாகக் கைகழுவுதல் எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ராஜபாளையம் ஒட்டிய பகுதியில் கேரள எல்லை இருப்பதால் அங்கு கூடுதல் கண்காணிப்புக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசு அறிவித்துள்ளது போல் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து கல்வி முறை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்கன்வாடிப் பணியாளர்கள் அனைவரும் தத்தம் பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வு குறிப்பாகக் கைகழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்து, ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொல்லம் ரயில் ராஜபாளையத்துக்குள் நுழையும்போது கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற பெரும் கூடுகைகளைத் தவிர்க்கமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்றார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கைகளை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்து கை கழுவும் செயல் விளக்க முறை நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT