Published : 16 Mar 2020 12:08 PM
Last Updated : 16 Mar 2020 12:08 PM
கரோனா பரவாமல் தடுக்க டாஸ்மாக் கடைகள், பார்களை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், மக்கள் கைகளைக் கழுவுவதற்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கடந்த வாரம் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், “சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது. கரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணிநேரம் தண்ணீர் விநியோகம் செய்ய குடிநீர் வாரியம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படுவதில்லை. ஹேண்ட் வாஷ் போன்ற கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் திரவங்களையும் வழங்கவேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகள், பார்களையும் மூடவேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், “நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் அமைந்துள்ளன. அவை சுகாதாரமற்ற முறையில் இயங்குவதால், கரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளது. ஆகவே டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்” எனக் கோரி கூடுதல் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதில், கரோனா வைரஸ் பாதித்து பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. (ஆனால் அந்த உத்தரவு மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுவிட்டது) இதை ரூ.10 லட்சமாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT