Published : 16 Mar 2020 09:30 AM
Last Updated : 16 Mar 2020 09:30 AM
பறவைக் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 அச்சம் காரணமாக முட்டை விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 70 லட்சம் முட்டைகள் சத்துணவுத் திட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 1 கோடி முட்டைகள் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக அங்கு முட்டைகளை விற்பனைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல், கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதன் மூலம் பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது.
இதன் காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி நுகர்வு குறைந்ததால், அதன் விலை கடும் சரிவைக் கண்டுவருகிறது. முட்டையின் நுகர்வைப் பொறுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்கிறது. இதன்படி கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 350 காசுகள் வீதம் நிர்ணயம் செய்யப்பட்ட முட்டையின் கொள்முதல் விலை, கேரள பறவைக் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 பீதி காரணமாக படிப்படியாக குறைந்து நேற்றைய நிலவரப்படி 265 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களில் மட்டும் முட்டை விலை 55 காசுகள் சரிந்துள்ளது.
இதனிடையே 6 ஆண்டுகளுக்குப் பின்னர் முட்டை விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருப்பது கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்க துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ள காலங்களில்கூட கோழி இறைச்சி மற்றும் முட்டை நுகர்வு பெரிய அளவில் பாதிக்காது. தற்போது கோவிட் -19 வைரஸ் காய்ச்சல் வதந்தி காரணமாக கோழி இறைச்சி, முட்டை நுகர்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 265 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், கோழிப்பண்ணைகளில் 80 காசுகள் முதல் ரூ.1.80 வரையே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், ஒரு முட்டை உற்பத்திக்கு ரூ.4 வீதம் செலவு பிடிக்கிறது. இந்த விலை வீழ்ச்சி மற்றும் முட்டை தேக்கத்தால் கோழிப் பண்ணையாளர்களுக்கு நாள்தோறும் ரூ.10 கோடி வீதம் இழப்பு ஏற்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு சுகாதாரத் துறையின் மூலம் முட்டை, கோழி இறைச்சி சாப்பிடுவதன் மூலம் கோவிட்-19 பாதிப்பு ஏற்படாது என விளம்பரம் செய்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.
இதுதொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளோம். மேலும், பண்ணையாளர்கள் இச்சிக்கலில் இருந்து மீண்டு வரும் வரை வங்கிக் கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கறிக்கோழி விலை கடும் சரிவு
முட்டை கொள்முதல் விலை குறைந்தாலும் கடைகளில் விற்பனை விலை குறையவில்லை. கடைகளில் முட்டை விலை ரூ.4 வரை விற்கப்படுகிறது. எனவே, கோழிப் பண்ணையாளர்கள் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நேரடியாக, பண்ணை விலைக்கே, முட்டைகளை விற்பனை செய்கின்றனர்.
அதேவேளையில் கோவிட்-19 பீதியால் முட்டைக் கோழி மற்றும் கறிக்கோழி விலையும் கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைக்கோழி தற்போது ரூ.30 வரை மட்டுமே பண்ணைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கறிக்கோழி கிலோ ரூ.15 முதல் 20 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இறைச்சிக் கடைகளில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment