

சளி, இருமல், காய்ச்சல் என கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் தென்படும் பக்தர்களை கோயில்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கோவிட்-19 வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கோவிட்-19 வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகள் வைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். நேற்று கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கோவிட்-19 வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
உடல் வெப்பநிலை
கோயில் நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை எந்த அளவில் உள்ளது என்று பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பக்தர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இதற்கிடையே, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பக்தர்களை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
நிர்வாகத்தினருக்கு அறிவுரை
சளி, இருமல், காய்ச்சல் என கோவிட்-19 வைரஸுக்கான அறிகுறிகள் தென்படும் பக்தர்களை கோயிலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி திருப்பி அனுப்ப வேண்டும்’’ என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி கோயில் நிர்வாகத்தினரை அறிவுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பக்தர்களை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.