Published : 16 Mar 2020 08:20 AM
Last Updated : 16 Mar 2020 08:20 AM
பாதுகாப்புப் பிரிவில் உள்ள போலீஸார் தினமும் பணிக்கு வரும் போதும், பணி முடித்து செல்லும் போதும் குழுவாக புகைப்படம் எடுத்து அதை துணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தாமதமாக வந்தால் சம்பளம் வழங்கப்படாது.
தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பொருளாதார குற்றப் பிரிவு, வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றுதல், கடலோர பாதுகாப்பு குழுமம், உளவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உட்பட 15-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பணிகள் உள்ளன.
மேலும், பாதுகாப்புப் பிரிவு போலீஸாரும் உள்ளனர். சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடி மேற்பார்வையில் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை பாதுகாப்புப் பிரிவு போலீஸார் செயல்படுகின்றனர்.
தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, சென்னை உயர் நீதிமன்றம், விமான நிலையம், காவல் ஆணையர் அலுவலகம், புழல் மத்திய சிறைச் சாலை உள்ளிட்ட அதிமுக்கியமான 15 இடங்களில் இந்தப் பிரிவு போலீஸார் தினமும் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை என 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்கின்றனர்.
மேலும், சென்னைக்கு வருகை தரும் அயல்நாட்டு அரசு அதிகாரிகள், அதிகாரிகள், இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், எதிர் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் என யார் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியையும் பாதுகாப்புப் பிரிவு போலீஸார் மேற்கொள்கின்றனர்.
இந்தப் பணியில் பெண் போலீஸாரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதிமுக்கிய பணிகளை மேற்கொள்ளும் பாதுகாப்புப் பிரிவு போலீஸாரில் சிலர் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது அந்தப் பிரிவு போலீஸாருக்கு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, சென்னை பாதுகாப்புப் பிரிவு போலீஸார் பணிக்கு வந்த உடன், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முதல்நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர் என அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்து அதை துணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
பணி முடிந்து செல்லும்போதும் இதை செய்ய வேண்டும். அனைவரது முகமும் தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும். ஒரே புகைப்படத்தை மீண்டும் அனுப்பி விடக் கூடாது.
உரிய நேரத்தில் பணிக்கு வராத போலீஸார் மற்றும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே பணி முடித்துச் செல்லும் போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அன்றைய தினம் ஊதியமும் வழங்கப்படாது. சென்னையில் முதல் முறையாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “காவல்துறையில் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை அவசியம். அதுவும் பாதுகாப்புப் பிரிவு போலீஸாருக்கு இவை மிக அவசியம். அதை அடிப்படையாக வைத்தே சில கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பிரிவில் உள்ள பெண் போலீஸார் தாங்கள் விரும்பும் ஆடைகளை இதுவரை அணிந்து பணிக்கு வருகின்றனர். அவர்களுக்கென பிரத்யேக சீருடை தயாராகி வருகிறது. இதேபோல் பாதுகாப்பு தொடர்பாக முதல் முறையாக தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இனி பாதுகாப்புப் பணிக்கு வரமுடியும். இதனால், பாதுகாப்புப் பணிகளை மேலும் துல்லியமாக மேற்கொள்ள முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT