Published : 16 Mar 2020 08:06 AM
Last Updated : 16 Mar 2020 08:06 AM
ஜிஞ்சுப்பள்ளி பனிகுண்டு பாறைக்கு அடியில் உள்ள 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீண்ட செஞ்சாந்து நடன ஓவியத்தை கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார்.
கிருஷ்கிரி மாவட்டம் ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி மேலூர் முனீஸ்வரன் கோயில் அருகே பனிகுண்டு பாறை உள்ளது. இதன் அடியில், ஓவியங்கள் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் அளித்த தகவலின் பேரில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக அருங்காட்சி யக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இது ஓர் அரியவகை பாறை ஓவியம் என்று கூறலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செஞ்சாந்து ஓவியங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறோம். அதிகமாக வெண்சாந்து ஓவியங்களே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படுகின்றன. செஞ்சாந்து ஓவியங்கள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.
இந்த முழு ஓவியமும் வெளிரிய செஞ்சாந்து ஓவியம் ஆகும். 7 மீட்டர் நீளத்துக்கு குழு நடனம் போன்று வளைந்து வளைந்து காணப்படுகிறது. பல இடங்களில் பாறை உதிர்ந்து விட்டதால் தொடர் விட்டுப்போய் உள்ளது. இவை கி.மு. 2000 ஆண்டில் வரையப்பட்டு இருக்கலாம். அதாவது இந்த ஓவியம் 4,000 முதல் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
வட்ட வடிவில் வீடுகளை அமைத்து அதன்மேல் குச்சியால் ஆன கூரை அமைத்துள்ளதுபோல் இந்தப் பாறை ஓவியத்தில் ஒரு குடிசை காட்டப்பட்டுள்ளது. பையம்பள்ளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புதிய கற்கால வீடு போன்றே இந்தப் பாறை ஓவியத்தில் குடிசை காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், குதிரையின் உருவமும் உள்ளது. நான்கு கால்களுடன் திரும்பிப் பார்ப்பதுபோல் உள்ளது. செவ்வக அமைப்பினுள் மனிதன் உள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது. இது தெய்வமாகவோ, தலைவனாகவோ இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘‘இந்த நடனக் காட்சியில் மனிதர்கள் தங்கள் கைகளை கோத்துக் கொண்டு பெரும் கூட்டமாக நின்று நடனமாடி இருக்கலாம். அதை பார்த்த மனிதன் அதேபோன்று வரைந்திருக்கலாம். ஓர் அடிக்கு 10 நபர்கள் வரையப் பட்டு இருக்கிறார்கள். 200-க்கும்மேற்பட்டோர் இருப்பதாக இதில் வரையப்பட்டுள்ளது. இது சிதையாமல் இருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்.
உலகின் நீண்ட ஓவியம்
இதுவரை இந்தியாவில் இவ்வளவு நீண்ட செஞ்சாந்து நடன ஓவியம் கண்டறியப்படவில்லை. இதன் அருகில் 1 கி.மீ. தொலை வில் ஆறு உள்ளதால் இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த தொடர் குழு நடனப்பாறை ஓவியம் உலகிலேயே நீண்ட தொடர் நடனக் காட்சியாக இருக்கும் என்பதால், இதை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment