Published : 15 Mar 2020 09:26 AM
Last Updated : 15 Mar 2020 09:26 AM
பெண்களின் தற்காப்புக் கலைகள் குறித்த பாடங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழாநேற்று நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
வாழ்க்கையில் சாதனை படைக்க ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. வெற்றி பெறுவோம் என உறுதியாக நினைத்தால் நீங்கள் முன்னேறலாம். அதற்கான வேட்கையும், விடாமுயற்சியும் மனதில் இருக்க வேண்டும்.
இன்றைய நவீன யுகத்தில் துரித உணவுகளின் ஆதிக்கத்தால் சிறுவயதிலேயே சர்க்கரை குறைபாடு, உடல்பருமன் என பல்வேறு உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் பெண்களே. பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றியதால் நம்முன்னோர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். எனவே, நமது கலாச்சாரம், உணவு முறையை விட்டு நாம் விலகி சென்றுவிடக்கூடாது.
நவீன யுகப் பெண்கள் சுதந்திரமாக இருப்பது தவறில்லை. அதேநேரம், உங்கள் பாதுகாப்பை நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பள்ளி பாடத்திட்டத்தில் பெண்களுக்கான தற்காப்புக் கலைகள் குறித்த பாடங்களைச் சேர்க்க அரசுகள் முன்வர வேண்டும்.
கோவிட்-19 வைரஸ் பாதிப்புகளைப் பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளன. எனினும், பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.
இவ்விழாவில் எத்திராஜ் கல்லூரி தலைவர் சந்திரதேவி தணிகாசலம், கல்லூரி முதல்வர்எஸ்.கோதை மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT