Published : 14 Mar 2020 07:07 PM
Last Updated : 14 Mar 2020 07:07 PM

சிஏஏ குறித்துப் பேச்சுவார்த்தை; இஸ்லாமியர் பிரச்சினைபோல் தோற்றத்தை உருவாக்க அரசு முயல்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

சிஏஏ, என்பிஆர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலே அனைத்துப் போராட்டங்களும் நின்றுவிடும். ஆனால், இஸ்லாமிய அமைப்புகளுடன் மட்டுமே அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''இன்று மாலை இஸ்லாமிய அமைப்புகளை தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடியவை.

அசாம் அனுபவம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. ஆனால், இதை இஸ்லாமிய மக்களின் பிரச்சினையாக மட்டும் முன்வைத்து, இந்து- முஸ்லிம் வேறுபாட்டை உருவாக்கி அரசியல் சுயலாபம் அடைவதே பாஜக அரசின் திட்டம். அதற்குத் துணைபோவது போல, இந்தியர் அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்துகிற அரசியல் பிரச்சினையை இஸ்லாமிய சமூகத்தின் பிரச்சினையாக மட்டும் தோற்றமளிக்க வைப்பதாகவே அதிமுக அரசின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்கள் அமைதியாகப் போராடி வரும்போது அவர்களை அச்சுறுத்தும் வகையிலும், சவால் விடும் வகையிலும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அமைப்புகள் வன்முறையைத் தூண்டும் வகையில் பகிரங்கமாகப் பேசி வருகின்றனர். இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. அதேசமயம் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் அழைத்துப் பேசுவது ஏன் எனக் கேள்வி எழுகிறது.

மத்திய அரசிடமிருந்து விளக்கம் வரவில்லை. எனவே என்பிஆர் கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கிறோம் என்று ஒரு முறையும், அது இப்போது தொடங்காது என்று ஒரு முறையும் வருவாய்த்துறை அமைச்சர் மாறி மாறிக் கூறியுள்ளார். அப்படியானால் மத்திய அரசிடமிருந்து விளக்கம் கிடைத்த உடன், கணக்கெடுப்பு நடைபெறும் என்று பொருளா? அதிமுக அரசு இதில் தன் நிலைபாட்டைக் குழப்பம் இல்லாமல் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் என்பிஆர், என்ஆர்சிக்கு ஒத்துழைக்க முடியாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் வலியுறுத்திய பின்னரும், அதிமுக அரசு இதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது.

இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றினால் தமிழகத்தில் போராட்டங்கள் முடிவுக்கு வருவதுடன் பொது அமைதி ஏற்படும். இதைச் செய்வதற்கு மாறாக, இஸ்லாமிய அமைப்புகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவது அம்மக்களின் போராட்டங்களைத் தவிர்க்க வேண்டுமென வற்புறுத்துவது பிரச்சினையைத் தீர்க்க உதவாது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அனைத்து மக்களும் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் நியாயமான முடிவு ஏற்பட அனைத்து அரசியல் கட்சிகளோடும், ஜனநாயக அமைப்புகளோடும் கலந்து பேசுவதே கடந்த கால நடைமுறை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x