Published : 14 Mar 2020 05:34 PM
Last Updated : 14 Mar 2020 05:34 PM
சிஏஏ விவகாரம் குறித்து தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் உள்துறைச் செயலர், டிஜிபி, காவல் ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். .
குடியுரிமைச் சட்டத்தில் (சிஏஏ) திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் இஸ்லாமியர்கள், இலங்கை மக்களுக்கான குடியுரிமை சம்பந்தமாக அவர்களைச் சேர்க்காமல் விலக்களிக்கப்பட்டது இஸ்லாமியர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. குடியுரிமைச் சட்டம் என்பிஆர், என்ஆர்சியை இஸ்லாமியர்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
என்பிஆரில் புதிதாக 3 கேள்விகள் சேர்க்கப்படுவதும், அதையொட்டி என்ஆர்சியில் அதைத் தொடர்புபடுத்தும்போது பாதிப்பு வரலாம் என்பதால் அதை நீக்கச்சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஷாகின் பாக் போல் தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் சிஏஏ குறித்து விவாதிக்க வேண்டும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் பல முறை முயற்சித்தும் அரசு அதை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இந்தப் பிரச்சினையின் தீவிரம் குறையாமல் இருப்பதால் தமிழக அரசு இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தனது தலைமையில் இன்று (மார்ச் 14) மாலை 4 மணிக்கு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை என அறிவித்திருந்தார். அவரது அறிவிப்புக்கு பலரும் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். சிஏஏ பிரச்சினை ஏதோ இஸ்லாமியர் பிரச்சினை போன்று அரசு தோற்றத்தை உருவாக்குகிறது. அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்துறைச் செயலர் கே.எஸ்.பிரபாகர், டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு தலைமை காஜி சலாவுதீன், அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் ஃபாத்திமா முசாஃபிர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் அப்துல் ரஹீம், சம்சுல் ரஹ்மானி, எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகி முஹமது ஷேக் அன்சாரி, ஐஎண்டிஜேவின் எஸ்.எம்.பாக்கர், தமுமுகவின் ஜவாஹிருல்லா, முஸ்லிம் லீக்கின் காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக்கின் இனாயத்துல்லா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கு பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment