Published : 14 Mar 2020 12:13 PM
Last Updated : 14 Mar 2020 12:13 PM
காஷ்மீர் தலைவர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்த மத்திய அரசு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இது கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதன்பின் இவர்கள் 3 பேரும், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தன்னை பங்கேற்க விடாமல் மத்திய அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக பரூக் அப்துல்லா குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் எழுதிய கடிதத்துக்கும் பரூக் அப்துல்லா பதில் கடிதம் எழுதி இருந்தார். அதை சசிதரூர் வெளியிட்டார்.
இந்தநிலையில், பரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவலை நீக்கியும், அவரை விடுவித்தும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதன்மைச் செயலாளர் ரோஷித் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டது தொடர்பாக, இன்று (மார்ச் 14) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.
இந்தச் சோதனையை எதிர்த்து அப்துல்லா பெற்றுள்ள வெற்றியானது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்முடைய நம்பிக்கையை நிலைநிறுத்தியிருக்கிறது.
தடுப்புக் காவலில் உள்ள உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
The release of Dr Farooq Abdullah from detention is a welcome step.
Dr Abdullah's victory over this ordeal vindicates our belief in democracy & Constitution!
I urge the Govt to revoke detentions against other leaders including @OmarAbdullah & @MehboobaMufti immediately.— M.K.Stalin (@mkstalin) March 14, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT